பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

என் சரித்திரம்

தானாதிகாரி அருகிலிருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயத்தில் அவரை அத்தியாபகராக நியமித்தார். கிருஷ்ண சாஸ்திரிகள், “பரமசிவனது கைங்கரியம் கிடைத்தது ஈசுவர கிருபையே” என்று எண்ணி அங்கே இருந்து வரலானார்.

கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயம் இராஜேந்திரனென்னும் சோழ சக்கரவர்த்தியால் அமைக்கப் பெற்றது. அந்த ஆலயத்தின் பெயர் கங்கைகொண்ட சோழீச்சுரமென்பது. கோயில் மிகப் பெரியது. அந்தப் பெரிய கோவிலுக்கு ஏற்றபடி சிவலிங்கப் பெருமானும் மிகப்பெரிய திருவுருவத்தை உடையவர். அங்கே சாரத்தில் ஏறித்தான் அபிஷேகம் முதலியன செய்வார்கள். அரிய சிற்பத் திறன் அமைந்த அவ்வாலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. வடநாட்டுக்குச் சென்று வெற்றிகொண்ட இராஜேந்திரசோழன் வடநாட்டு அரசர்கள் தலையில் கங்கா ஜலத்தை ஏற்றிக் கொணர்ந்தானென்றும் அதனால் அவனுக்குக் கங்கைகொண்ட சோழனென்னும் சிறப்புப் பெயர் வந்ததென்றும் சொல்வர். தனது வடநாட்டு வெற்றிக்குப் பின் அச்சக்கரவர்த்தி கங்கைகொண்ட சோழபுரத்தை நிருமாணம் செய்து அங்கே சிவாலயத்தையும் அரண்மனையையும் அமைத்தான். பழைய காலத்தில் சோழ ராஜதானியாக இருந்த அந்நகரம் இப்போது சிற்றூராக இருக்கிறது. ஆலயம் பழைய நிலை மாறிப் பல இடங்களில் குலைந்து காணப்படுகின்றது.

அந்த ஆலயத்தில் சிங்கக் கிணறு என்ற ஒரு தீர்த்தம் உண்டு. சிங்கத்தின் வாய்க்குள் புகுந்து செல்வதுபோல அதன் படிகள் அமைந்துள்ளன. வட நாட்டு அரசர்களால் எடுப்பித்து வந்த கங்கா ஜலத்தை அந்தக் கிணற்றில் விடும்படி அரசன் கட்டளையிட்டான். அதனால் அதனைக் கங்கையென்றே கூறுவார்கள். பிற்காலத்தில் கங்கை அதில் ஆவிர்ப்பவித்தாக ஓர் ஐதிஹ்யம் ஏற்பட்டு விட்டது.

கிருஷ்ண சாஸ்திரிகள் தமக்கு அளிக்கப் பெற்ற ஒரு வீட்டில் இருந்து தமக்குரிய வருவாயைப் பெற்றுத் திருப்தியுற்றார். தம்முடைய நித்திய கர்மங்களைத் தவறாமல் முடித்துக்கொண்டும், ஆலயத்திற்குச் சென்று தம்முடைய கடமையைச் செய்துகொண்டும் வாழ்ந்து வந்தார். சிங்கக் கிணற்றில் விடியற் காலம் ஸ்நானம் செய்வது அவர் வழக்கம். ஆலயத்தின் தேவகோஷ்டத்தைச் சூழ்ந்து சுவரில் அமைந்துள்ள சிவபெருமானுடைய அறுபத்து நான்கு மூர்த்தங்களையும் தரிசித்து இன்புறுவர். தேவகோஷ்டத்தின் முன்பு தெற்கும் வடக்கு முள்ள வாயில்களில் கீழ்ப்