பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண சாஸ்திரிகள்

39

பக்கத்துச் சுவரில் மேற்கு முகமாக மிகப் பெரியனவாகவும் அழகுடையனவாகவும் லக்ஷ்மி வடிவமும், ஸரஸ்வதி வடிவமும் உள்ளன. அவ்விரண்டு தேவிகளிடத்தும் அவருக்கு அன்பும் ஈடுபாடும் அதிகம்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அவர் இருந்த காலத்தில் மூன்று பெண்கள் பிறந்தனர் அவர்களுக்கு முறையே லக்ஷ்மி பாகீரதி, ஸரஸ்வதி என்னும் பெயர்களை வைத்தனர். தேவ கோஷ்டத்திலுள்ள பிம்பங்களும் சிங்கக் கிணற்றின் கங்கையுமே அப்பெயர்களை வைப்பதற்குக் காரணமாயின.

மூன்றாம் பெண்ணாகிய ஸரஸ்வதியே என் தாயார், என் தாயாரது முகத்தின் முகவாய்க்கட்டையில் ஒரு தழும்பு உண்டு. என் மாதாமகர் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்ததற்கு அடையாளம் அது. என் அன்னையார் சிறு குழந்தையாக இருக்கையில் திண்ணையில் விளையாடும்பொழுது அங்கே சுவரிற் சார்ந்திருந்த காசாங் கட்டையின் நுனி கிழித்து விட்டதாம். அதனால் காயம் உண்டாகிச் சில காலம் இருந்ததாம் அந்தத் தழும்பே அது.

சில வருஷங்கள் கிருஷ்ண சாஸ்திரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து வருகையில் ஒரு நாள் அங்கிருந்த பிராமணர் ஒருவர் இறந்தார். அவரை ஸ்மசானத்துக்குக் கொண்டு போவதற்குப் பிராமணர் நால்வர் வேண்டுமல்லவா? கிருஷ்ண சாஸ்திரிகள் அந்தக் கைங்கரியத்தைச் செய்வதாக முன் வந்தார். மற்றொருவரும் உடன்பட்டார். பின்னும் இருவர் வேண்டுமே; அகப்படவில்லை. வேறு வழியின்மையால், வேறு ஜாதியினராகிய இருவரைப் பிடிக்கச் செய்து நால்வராகக் காரியத்தை நிறைவேற்றினர்.

வைதிக சிரத்தைமிக்க கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய கவலையை உண்டாக்கியது “நமக்கும் இவ்வாறு நேர்ந்தால் என்ன செய்வது?” என்று அவர் யோசித்தார். “இத்தகைய இடத்தில் இருப்பது தவறு” என்று நினைத்துக் கோயிலதிகாரியிடம் விடைபெற்று அவ்வூரைவிட்டுப் புறப்பட்டார்.

அப்பால் அவர் தம்முடைய மைத்துனி குமாரர்களாகிய இருவர் உள்ள கோட்டூருக்கு வந்து சேர்ந்தார். அக்கினீச்சுவர ஐயர், குருசாமி ஐயர் என்னும் பெயருடைய அவ்விருவரும் நிரம்பிய செல்வர்கள். மிகுதியான பூஸ்திதியையுடையவர்கள்; வைதிக சிரத்தையும் தெய்வ பக்தியும் பொருந்தியவர்கள். யார் வந்தாலும்