பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

என் சரித்திரம்

அன்னமளித்து உபசரிப்பார்கள். எந்த ஜாதியினரானாலும் உபகாரம் செய்வார்சள். அவர்கள் பலருக்கு விவாகங்களும் உபநயனங்களும் செய்து வைத்தார்கள். உத்யோகஸ்தர்களும் வித்துவான்களும் மிராசுதார்களும் அவர்களிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள்.

கிருஷ்ண சாஸ்திரிகளைக் கண்டவுடன் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. “எங்கள் தகப்பனாருடைய ஸ்தானத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பல இடங்களில் நீங்கள் ஏன் அலைய வேண்டும்? இங்கேயே இருந்து உங்கள் பூஜை முதலியவற்றைக் கவலையில்லாமல் செய்துகொண்டு எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்” என்றார்கள். அவர்கள் விருப்பப்படியே அவர் சிலகாலம் அங்கே தங்கியிருந்தார். ஆயினும், அவருடைய மனம் தனியே இருத்தலை நாடியது. கவலையற்றுத் தனியே வாழவேண்டுமென்று விரும்பினார். தம் கருத்தை அச்சகோதரர்களிடம் தெரிவிக்கவே, அவர்கள் முன்பே தம்மிடம் கிருஷ்ண சாஸ்திரிகள் அனுப்பியிருந்த தொகையோடு தாமும் சிறிது பொருள் சேர்த்துச் சூரியமூலையில் நன்செய் புன்செய்கள் அடங்கிய முப்பதுமா நிலம் வாங்கி அளித்துத் தமக்குரிய வீடொன்றையும் உதவி அங்கே சுகமாக வசித்து வரும்படி கேட்டுக்கொண்டனர்.

“பரமேசுவரனது கிருபை இந்த இடத்தில் சாந்தியோடு வாழ வைத்தது” என்ற எண்ணத்தோடு கிருஷ்ண சாஸ்திரிகள் சூரிய மூலையில் தனியே வாழ்ந்து வரலானார். நிலங்களைக் குத்தகைக்கு விட்டுச் சிவ பூஜையிலும் மந்திர ஜபங்களிலும் ஆனந்தமாகப் பொழுதைப் போக்கிச் சிவ கிருபையை துணையாகக்கொண்டு திருப்தியோடு இருந்து வந்தார்.

நிலங்களைக் குத்தகை எடுத்த குடியானவர்கள் அவருக்குக் கவலை வைக்காமல் அவற்றைப் பாதுகாத்தும் அவருக்கு வேண்டியவற்றைக் கவனித்து அளித்தும் வந்தனர்.

சூரியமூலை இப்போது சூரியமலை யென்று வழங்குகிறது. கஞ்சனூருக்கு ஈசானிய மூலையில் அவ்வூர் இருக்கின்றது. ஈசானிய மூலைக்குச் சூரியமூலை யென்பது ஒரு பெயர். அதனால் இப்பெயர் வந்தது. இதனைச் சூரியகோடி யென்று வடமொழியில் வழங்குவர். அவ்வூர்ச் சிவாலயத்திலுள்ள சிவபெருமானுக்குச் சூரியகோடீசுவர ரென்பது திருநாமம். சூரியமூலை பெரிய ஊரன்று; பெரிய ஸ்தலமுமன்று. ஆனால் அடக்கமாக வாழ விரும்பிய கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு அந்த மூலை ஊரே சிறந்ததாகத் தோன்றியது. “இந்தச் சின்ன ஊரிலே நீங்கள் இருக்கிறீர்களே” என்று யாராவது கேட்டால்,