பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண சாஸ்திரிகள்

41

“அனாசாரத்திற்கு இடமில்லாதது இந்த ஊர். திரண காஷ்ட ஜல சமர்த்தியுள்ளது. வேறு என்ன வேண்டும்?” என்று விடையளிப்பார். (திரணம்-புல்; காஷ்டம்-விறகு.) பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் நிரம்பின இடம் வசிப்பதற்குக் தகுதியுள்ள தென்பது அவர் கருத்து.

சூரியமூலைக்கு வடபால் பழவாறு என்ற நதி ஓடுகிறது. காவிரியிலிருந்து வயல்களுக்குப் பாய்ந்த கழிவு நீரோடை அது. அது முதலில் ஓட்டை வாய்க்காலென்னும் பெயரோடு வருகிறது. அதுவே பழவாறாகிப் பிறகு விநாயகநதி யென்ற பெயரைப் பெறுகிறது. திருவெண்காட்டுக்கருகில் மணிகர்ணிகை என்னும் தீர்த்தமாகிப் புராணத்தாற் பாராட்டப்படும் பெருமையை உடையதாக விளங்குகின்றது.

கிருஷ்ண சாஸ்திரிகள் அந்தப் பழவாற்று ஸ்நானத்தையே கங்கா ஸ்நானத்திலும் பெரியதாக நினைத்தார். தம்முடைய வீட்டின் பின்புறத்திலும் மேல் பக்கத்திலும் உள்ள விசாலமான இடங்களில் பலவகையான புஷ்ப மரங்களும் செடிகளும் கொடிகளும் பஞ்ச பில்வங்களும் வைத்துப் பயிர் செய்தார். அவற்றிலிருந்து நாள்தோறும் மிகுதியான புஷ்பங்களையும் பத்திரங்களையும் பறித்துப் பூஜை செய்வார். அபிஷேகத்திற்குப் பசுவின் பாலும் அருச்சனைக்கு வில்வமும் இல்லாமல் பூஜை செய்யமாட்டார். அருச்சனைக்கு மலர் தரும் பூஞ்செடிகளை வைத்துப் பாதுகாத்தது போலவே அபிஷேகத்துக்குப் பால் தரும் பசுக்களையும் அவர் அன்போடு வளர்த்து வந்தார். மாலை வேளையில் தாமே புல் பறித்து எடுத்து வந்து பசுக்களுக்குப் போடுவார். அவர் நினைத்திருந்தால் தம் நிலங்களில் பயிர்செய்து பொழுதுபோக்கலாம். அவர் கருத்து அதில் ஊன்றவில்லை. தம்முடைய பூஜைக்கு வேண்டிய மலர்களை உதவும் மலர் வனத்தைப் பயிர் செய்வதில்தான் அவருடைய விருப்பம் சென்றது. மகா கைலாச அஷ்டோத்தரம் சொல்லி அம்மலர்களால் அருச்சனை புரிவதே அவருக்கு இன்பத்தைத் தந்தது.

விடியற்காலையில் எழுந்திருப்பதும் பழவாற்றில் ஸ்நானம் செய்வதும் அனுஷ்டானங்கள் செய்வதும் விரிவாகப் பூஜை செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறப் பிற்பகல் இரண்டு மணி வரையில் ஆகும். அப்பால் போஜனம் செய்வார். பிறகு சிவநாமம் செய்துகொண்டே இருப்பார். மாலையில் சென்று பசுவுக்குப் புல் எடுத்து வருவார். சந்தியா காலத்தில் சந்தியா வந்தனம் செய்துவிட்டுத் தம்முடைய ஆத்மார்த்த மூர்த்தியாகிய சிதம்பரேசருக்கு அர்ச்சனையும் நிவேதனமும் கற்பூர ஹாரத்தியும் செய்வார். பிறகு உண்பார். எப்போதும் சிவநாமஸ்மரணையை மறவார்.