பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள்

583

முதலியாரிடம் ஒருநாள் சென்றேன். முன்பே பார்த்துப் பழகியவராதலின் திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும், கும்பகோணம் காலேஜைப்பற்றியும் அவர் விசாரித்தார். "சீவகசிந்தாமணியை உரையுடன் பதிப்பிப்பதற்காக வந்திருக்கிறேன்" என்று நான் சொன்னேன். அதைக் கேட்டு அவர் திடுக்கிட்டார். "என்ன ஐயா? சிந்தாமணி உரையையாவது. நீங்கள் பதிப்பிக்கிறதாவது? அது சுலபமான காரியமா? நீங்கள் பால்யர். சிந்தாமணி நூலுக்கும் உரைக்கும் உள்ள பெருமை என்ன? அதை முடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்குமே! அந்த முயற்சியை நிறுத்திக் கொள்ளுதல் மிகவும் நல்லது. ஆழந் தெரியாமல் காலை விடக்கூடாது" என்று கண்டிப்பாகச் சொன்னார். அப்படி அவர் சொன்னதைக் கேட்டு நானும் ஆச்சரியமடைந்தேன்.

பழைய முயற்சிகள்

"நான் ஏன் பதிப்பிக்கக்கூடாது? அந்த நூலையும் உரையையும் பலமுறை படித்து ஆராய்ந்திருக்கிறேன். அதற்கு வேண்டிய கருவி நூல்களையும் படித்திருக்கிறேன். நிறைவேற்றி விடலாமென்ற துணிவு எனக்கு இருக்கிறது" என்று தைரியமாகச் சொன்னேன். கும்பகோணத்தில் சீவகசிந்தாமணியை ஆராய்ந்து வந்தபோது இப்படி யாராவது சொல்லியிருந்தால் நான் சிறிது அச்சமடைந்திருப்வபேன். அஷ்டாவதானம் சபாபதி முதலியாரோடு சம்பாஷித்த அந்தச் சமயத்திலோ நான் சிந்தாமணியின் ஞாபகமாகவே இருந்தேன். யார் வந்து தடுத்தாலும் என் முயற்சியை நிறுத்திக் கொள்ளாத உறுதி என்னிடம் இருந்தது.

"நான் ஆரம்பித்திருக்கும் இந்த நல்ல காரியம் நன்றாக நிறைவேற வேண்டுமென்று வாழ்த்துவதை விட்டு இப்படி அதைரியம் உண்டாக்குகிறீர்களே!"

"ஆரம்பித்தால் என்ன? இதற்கு முன் இந்த நூலைப் பதிப்பிக்கப் பலர் ஆரம்பித்து அந்த ஆரம்பத்தோடே அது நின்றுவிட்டது. நானும் என் ஆசிரியராகிய காஞ்சிபுரம் சபாபதி முதலியாரும்

இதைப் பதிப்பிக்க வேண்டுமென்று எண்ணிப் படிக்கத் தொடங்கினோம்; கஷ்டமென்று தோற்றினமையால் நிறுத்திவிட்டோம். [1]பல வருஷங்களுக்குமுன், ட்ரூ என்னும் பாதிரியார் (The Rev.


  1. The Printing of Chintamani was more than once projected. About 20 years ago, the late Rev. W. H. Drew published a prospectus with a specimen of the work; but his premature death put an end to the great undertaking. —H. Bower in his Preface to the edition of ‘Nanagal llambakam’