பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582

என் சரித்திரம்

கோபாலசுவாமி முதலியார், “நல்ல சகுனமாகிறது. உத்தேசித்த காரியம் நன்றாக நிறைவேறும். பழம் வருகிறது. உங்கள் முயற்சி பலனைப் பெறும். கவலையின்றிப் போய் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த மனிதனைப் பார்த்து, “அடே, அதில் இரண்டு பழங்கள் அவர்களிடம் கொடு” என்று உத்தரவு செய்தார். கையில் பழம் கிடைத்தபோது நான் என்னையே மறந்தேன். ‘கடவுள் திருவருள்’ என்று எண்ணிச் சென்றோம்.

பதிப்பு ஆரம்பம்

அச்சுக்கூடத்திற்குச் சென்று விக்கினேசுவர பூஜை செய்து விட்டுத் தலைவரிடம் நான் கொண்டு சென்ற கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தேன். அதை உடனே அவர் அடுக்குவதற்குக் கொடுத்து விட்டார். ராயல் எட்டுப் பக்க அளவில் ஐந்நூறு பிரதிகள் அச்சிடுவதென்றும், ஒரு பாரத்துக்கு 3? ரூபாய் அச்சுக்கூலியென்றும் பேசி ஏற்பாடு செய்து கொண்டோம்.

அச்சு வேலை தொடங்கியது. தக்க பழக்கமில்லாத எனக்குச் சுப்பராய செட்டியாரும், ராஜகோபாலாச்சாரியரும் உதவி புரிந்து வந்தனர். நூற்பெயர், இலம்பகப் பெயர், தலைப்பு, மூலம், உரை என்பவற்றை வெவ்வேறு எழுத்துக்களில் அமைக்கும்படி ராஜ கோபாலாச்சாரியர் திட்டம் செய்தார். முதற் பாட்டிற்குரிய உரையில் மேற்கோள்கள் பல இருந்தன. அவற்றை அடிக் குறிப்பிலே எவ்வாறு தெரிவிப்பதென்று நான் மயங்கினேன். அவர் உடுக்குறி முதலிய அடையாளங்களை முறையே போட்டு அவற்றின் பெயரை எனக்குத் தெரிவித்தார். சில குறியீடுகள் போதாமல் இருந்தமையால் நூதனமாக வார்ப்பிக்க ஏற்பாடு செய்து உபயோகப்படுத்திக் கொண்டேன்.

சென்னைக்கு வந்தது முதல் சிந்தாமணிப் பதிப்புக்கு உரிய அனுகூலங்கள் கிடைத்து வருவதைச் சுப்பிரமணிய தேசிகருக்கும் என் தந்தையாருக்கும் தெரிவித்தேன். பதிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.

அத்தியாயம்—96

சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள்

சீவகசிந்தாமணி அச்சாதி வந்தபோது நான் சென்னையிலுள்ள வித்துவான்களை இடையிடையே கண்டு பேசிப் பழகுவேன். புரச பாக்கத்திலிருந்த அஷ்டாவதானம் சபாபதி