பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம்

581

“எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கலாம்?” என்று ஆலோசிக்கையில் அவர், “சூளை அவதானம் பாப்பையர் வீதியில் திராவிட ரத்னாகரம் என்ற பெயருள்ள அச்சுக்கூடமொன்று இருக்கிறது. அதன் சொந்தக்காரராகிய ஸ்ரீ த. கோவிந்த ஆசாரியார் என்பவர் என் நண்பர். மிகவும் யோக்கியமானவர். செட்டியாரவர்களுக்கும் தெரிந்தவர்” என்றார். “நீங்கள் சொல்வது எனக்கு நல்ல சகுனமாகத் தோற்றுகிறது; தமிழ்க் கடல் என்னும் அர்த்தத்தைத் தரும் திராவிட ரத்னாகர அச்சுக்கூடத்தில் சிந்தாமணியைப் பதிப்பிப்பது மிகவும் பொருத்தமே. சிந்தாமணி ஒரு கடலில் தானே தோன்றியது? தமிழ்ச் சிந்தாமணி தமிழ்க் கடலிலிருந்து வெளிவருது நன்மையே” என்று என் சந்தோஷத்தையும் உடன்பாட்டையும் தெரிவித்துக்கொண்டேன்.

நல்ல சகுனம்

சேலம் இராமசுவாமி முதலியாருடைய தந்தையாராகிய கோபாலசாமி முதலியாரென்பவர் அப்பொழுது சேலத்திலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். அவர், நான் சுப்பராய செட்டியார் வீட்டில் தங்கியிருத்தலை அறிந்து தம்முடைய பங்களாவிலேயே ஜாகை வைத்துக்கொள்ளலாமென்று எனக்குச் சொல்லியனுப்பினார். அவர் சொன்னபடியே நான் அங்கே சென்று வெளியறையொன்றில் தங்கியிருந்தேன்.

சிந்தாமணியை அச்சுக்குக் கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்து நல்ல வேளையாகிய அன்று பிற்பகல் மூன்று மணிக்கு அச்சுக்குக் கொடுக்கவேண்டிய பாகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நானும் சுப்பராய செட்டியாரும் சேலம் இராமசுவாமி முதலியார் பங்களாவிலிருந்து புறப்பட்டோம். கோபாலசுவாமி முதலியார் எங்களை அனுப்பும் பொருட்டு உடன் வந்து பங்களா வாசலில் நின்றார். அப்போது சிறு தூற்றல் தூறிக்கொண்டிருந்தது. “தூறுகிறது போலிருக்கிறதே” என்று சுப்பராய செட்டியார் சிறிது தயங்கி நின்றார். நான், “சிறு தூறல் நல்லதுதான்; குற்றமில்லை; புறப்படலாம்” என்று சொல்லவே புறப்பட்டோம்.

செல்லுகையில் பங்களாவின் புறவாயிலிலிருந்து ஒரு மனிதன் தன் கையில் வஸ்திரத்தால் மூடிய ஒரு பெரிய வெள்ளித் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு பங்களாவை நோக்கி வந்தான். நாங்கள் நெருங்க நெருங்க, அவன் அதன் மேலே இருந்த வஸ்திரத்தை எடுத்து விட்டான். அந்தத் தாம்பாளத்தில் கிச்சிலி முதலிய பழங்கள் இருந்தன. அவற்றின்மேல் என் பார்வை விழுந்ததோ இல்லையோ எனக்குப் புளகாங்கிதமம் உண்டாயிற்று. அதே சமயத்தில் பின்னே நின்று எங்களைக் கவனித்த-