பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய ஊக்கம்

599

சென்னைக்குச் செல்லும் வழக்கத்தை மேற்கொண்டிருந்த நான், அது முதல் ஒரு வாரம் ஓய்வு கிடைத்தாலும் அப்பொழுது அந்நகருக்குச் சென்று கவனிக்க வேண்டியவற்றைக் கவனித்து வருவேன்.

1887-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்குச் சென்னை சென்றேன். திருமானூர்க் கிருஷ்ணையர் மிகவும் நம்பிக்கையாகவும், ஒழுங்காகவும் தம் கடமையைச் செய்து வந்தார். அவருக்கு மாதம் பதினைந்து ரூபாய் வீதமே நான் கொடுத்தேன். அதை வைத்துக்கொண்டு சென்னையில் அவர் ஜாக்கிரதையாகக் குடும்பத்தோடு இருந்து காலக்ஷேபம் செய்து வந்தார். சமய சஞ்சீவியாக வந்து என்னுடன் இருந்து அவர் செய்த உதவிகளை நான் என்றும் மறக்க இயலாது.

‘புதையல்கள்’

சிந்தாமணியில் ஆறாவது இலம்பகமாகிய கேமசரியாரிலம்பகம் வரையில் அச்சாகியிருந்தது. மேற்கொண்டு நடக்க வேண்டிய பகுதிகளை என்ன என்ன விதங்களில் செவ்வைப்படுத்தலாமென்பதையே யோசித்துக் கொண்டிருந்தேன். நச்சினார்க்கினியர் உரையில் வரும் மேற்கோள்களுக்குரிய ஆகரங்களை அடிக்குறிப்பில் எடுத்துக் காட்டி வந்தேன். ஆனால் எல்லா மேற்கோள்களுக்கும் இடம் அகப்படவில்லை. இன்னும் முயன்று பார்த்தால் பலவற்றின் ஆகரங்களைக் கண்டு பிடிக்கலாமென்ற நினைவினால் என்பாலுள்ள பழஞ் சுவடிகளைப் பார்க்கத் தொடங்கினேன்.

ஒருநாள் இரவு என்னிடமிருந்த ஏடுகளில் ஒன்றை எடுத்துப் படித்தேன் முதலும் ஈறும் இல்லாதது அது. பொருநராற்றுப்படை என்ற பெயர் முதலேட்டிலிருந்தது. பிள்ளையவர்கள் பிரதியாகிய அதைப் படித்து வருகையில் சிந்தாமணி உரையில் வந்திருந்த மேற்கோள்கள் காணப்பட்டன. “அடடா! இதை இதுகாறும் ஊன்றிக் கவனிக்கவில்லையே!” என்று வருந்தி மேலும் படித்து வந்தேன். பொருநராற்றுப் படைக்குப் பின் சிறுபாணாற்றுப்படை இருந்தது. பிறகு பெரும்பாணாற்றுப் படையும், முல்லைப் பாட்டும், மதுரைக் காஞ்சியும் இருந்தன. உரையுடன் உள்ள அந்தப் பிரதியைப் படித்து வருகையில், “முருகு பொருநாறு” என்ற தனிப்பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது. அதுகாறும் அந்தச் சுவடி பத்துப் பாட்டென்று தெரியாது. ஊன்றிக் கவனியாததால் வந்த குறை அது. அது பத்துப்பாட்டென்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். படிக்கப் படிக்கச் சிந்தாமணி உரையில்