பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

600

என் சரித்திரம்

வரும் மேற்கோள்கள் பல அகப்பட்டன. நான் படிக்கும்போது என் மனம் அந்தப்பாட்டுக்களின் பொருளிலே முற்றும் செல்லவில்லை. சிந்தாமணி உரையில் வரும் மேற்கோள்கள் அவ்வளவும் என் ஞாபகத்தில் இருந்தன. ஆதலின் எங்கேயாவது எந்த மேற்கோளாவது கிடைக்குமோவென்று நாடிப் படித்தேன். என் உழைப்பு வீண் போகவில்லை. அச்சுக்கூடத்தில் தனி அறையிலிருந்து அந்தப் பழைய ஏட்டுச்சுவடியைப் பார்க்கத் தொடங்கியபோது இரவு மணி எட்டு இருக்கும். அப்போது என்னுடன் கிருஷ்ணையரும் இருந்தார். ஒன்பது மணியானவுடன் அவர் படுத்துத் தூங்கி விட்டார். பொருநராற்றுப் படையையும், சிறுபாணாற்றுப்படையையும், முல்லைப் பாட்டையும் காணக்காண எனக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. நேரம் போனதே தெரியவில்லை. மதுரைக் காஞ்சிவரையில் தான் பிரதியில் இருந்தது. அதை முடித்துவிட்டுப் பார்த்தேன். விடியற்காலை, மணி ஐந்துக்கு மேலாகியிருந்தது! பிறகும் எனக்குத் தூக்கம் வரவில்லை. அப்போது நான் கண்டு பிடித்த விஷயங்களை நினைந்து நினைந்து மகிழ்ந்தேன்.

கிருஷ்ணையர் விழித்துக்கொண்டார். “என்ன இது! இராத்திரி முழுவதும் தூங்கவில்லையா என்ன?” என்று கேட்டார். “தூங்குவதா? இந்த ஓர் இரவில் எனக்கு எத்தனை புதையல்கள் கிடைத்தன தெரியுமா?” என்று பெருமிதத்தோடு சொன்னேன். அவருக்கு விஷயம் விளங்கவில்லை. “நான் பத்துப் பாட்டைக் கண்டு பிடித்தேன். அதற்கு மேல் சிந்தாமணியின் உரையில்வரும் உதாரணங்கள் பலவற்றைக் கண்டு பிடித்தேன்” என்று சொன்னேன். “எல்லாம் சிவகிருபை!” என்றார் அவர்.

புறநானூறு

அன்று முதல் என்னிடமிருந்த எட்டுத் தொகைச் சுவடிகளையெல்லாம் ஏடு ஏடாக வரி வரியாக எழுத்தெழுத்தாக ஆராயலானேன். ஆதியும் அந்தமும் இல்லாத மற்றொரு நூலை எடுத்தேன். பிரித்துப் பார்த்தேன். “கொற்றுறைக் குற்றில” என்னும் பகுதி கண்ணிற்பட்டது. உடனே வியப்புற்றேன். அதே தொடரை நச்சினார்க்கினியர் சிந்தாமணி உரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால் அவர் தம் வழக்கத்தை விடாமல், ‘என்றார் பிறரும்’ என்றே எழுதியிருக்கிறார். பழைய நூலென்று தெரிந்ததேயொழிய இன்ன நூலென்று தெளிவாகவில்லை. அந்தப் பிரதி மூலமும் உரையுமாக இருந்தது. அந்தப் பாடலின் இறுதியில் 95 என்ற எண் காணப்பட்டது. என் கையில் நற்றிணை முதலியவற்றின் மூலம் மட்டும் அடங்கிய கையெழுத்துப் பிரதி வேறு இருந்தமையால்