பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகிழ்ச்சியும் வருத்தமும்

603

அவ்வூரில் கவிராச பண்டாரம் என்ற புலவர் பெருமானுடைய பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர் அவருடைய வீட்டுக்குச் சென்று அவரைப் பழக்கம் செய்து கொண்டு, அவ்வீட்டிலுள்ள ஏடுகளைத் தேடிப் பார்த்தேன் எவ்வளவோ பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. சிந்தாமணியில் சில பகுதிகள் மட்டும் கிடைத்தன. பிறகு அதன் அருகிலுள்ள கிருஷ்ணாபுரம், கடையநல்லூர் என்னும் ஊர்களுக்குச் சென்று அங்கிருந்த கவிராயர்கள் வீடுகளில் ஏடுகளைக் கவனித்தபோது அங்கும் சிந்தாமணியின் சில பகுதிகளே கிடைத்தன. அச்சமயம் சேற்றூர்ச் சுப்பிரமணியக் கவிராயர், திருநெல்வேலி கால்ட்வெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த குமாரசாமி பிள்ளையினுடைய சிந்தாமணிக் கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொடுத்தார். முற்றும் இருந்தது அது தூத்துக்குடி வீரபாண்டிய கவிராயரென்பவரது பிரதியைப் பார்த்து எழுதியது; திருத்தமாக இருந்தமையால் எனக்கு மிகவும் பயன்பட்டது.

செங்கோட்டைக் கனவான்

செங்கோட்டையில் சிந்தாமணிக்காக முன்னமே கையொப்பம் செய்திருந்த ஒரு கனவான் இருந்தார். என்னுடன் வந்தவர் கையொப்பப் பணத்தை அவரிடம் கேட்கப் போன போது அவர், “இவர் பதிப்பு எனக்கு வேண்டாம். இவர் பிழையாகவல்லவா பதிப்பிக்கிறார்? நான் வேறு ஒருவர் பதிப்பிக்கும் சுத்தப் பதிப்பையே வாங்கிக் கொள்ளப் போகிறேன்” என்றாராம். இவ்விஷயம் எனக்குத் தெரிந்தபோது என் பதிப்புக்கு விரோதமான புரளிகள் செங்கோட்டையிலும் பரவியிருத்தலை உணர்ந்து வருந்தினேன். “ஏடு தேடியது போதும்; இனி விரைவில் புஸ்தகப் பதிப்பை நிறைவேற்ற வேண்டும்” என்று உடனே புறப்பட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

அஷ்டாவதானம் சபாபதி முதலியார் பாராட்டு

அந்த எண்ணத்தால் அது முதல் காலேஜில் இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் ஓய்வு கிடைத்தாலும் சென்னைக்குச் சென்று சிந்தாமணிப் பதிப்பு வேலையைக் கவனித்து விட்டுவரும் வழக்கத்தை மேற்கொண்டேன். அவ்வாறு போயிருக்கையில் ஒரு முறை அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம் சென்றேன். சிந்தாமணியைப் பதிப்பித்தல் மிகவும் கடினமான காரியமென்று முன்னமே அவர் அச்சுறுத்தியிருந்தாலும் அவர் நல்ல அறிவாளியாதலால் அவரைப் பார்த்தலில் எனக்கு விருப்பமுண்டு. பல நூல்களில் அவர் பழக்கமுள்ளவர்; மிகவும் ரசமாகப் பேசுவார். அன்று