பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

604

என் சரித்திரம்

அவரோடு நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எங்கள் சம்பாஷணை பல புலவர்களையும், தமிழ் நூல்களைப் பற்றியும் நிகழ்ந்தது. நான் இடையிடையே பல பழைய பாடல்களை எடுத்தெடுத்துச் சொன்னேன். பிள்ளையவர்களிடம் பாடங் கேட்ட பிரபந்தங்களிலும் புராணங்களிலுமிருந்து தங்கு தடையின்றிப் பல செய்யுட்களைச் சொல்லி வந்தேன். திடீரென்று முதலியார் எதையோ நினைத்துக் கொண்டவர் போல, “ஐயா, நீஙகள் சிந்தாமணியைப் பதிப்பிக்கத் தகுதியுடையவர்களே” என்று சொன்னார். நாங்கள் பேசி வந்த விஷயத்துக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஆனாலும் என்னோடு பேசியபோது முதலியார் தமிழ் நூல்களில் எனக்குள்ள பயிற்சியைத் தனியே நோக்கிக் கவனித்தார் போலும். முன்பு தாம் கூறிய கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அப்போது அவருக்குத் தோற்றியிருக்கலாம். எனக்கு மிக்க வியப்பும் சந்தோஷமும் உண்டாயின. “என்ன, திடீரென்று இப்போது இப்படிச் சொன்னீர்களே!” என்று அவரைக் கேட்டேன்.

“முன்பு ஒரு நாள் சிந்தாமணிப் பதிப்பை நீங்கள் கைவிட்டுவிட வேண்டுமென்று நான் சொன்னேனல்லவா? அதை ஏன் சொன்னோமென்று இப்போது தோற்றியது. உங்களுடைய பரந்த தமிழறிவை இப்போதுதான் நன்றாக அறிந்து கொண்டேன்” என்று சொல்லிப் பின்னும் பாராட்டினார்.

அன்று முழுவதும் அந்த மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தேன். ஆனால் நிலையான மகிழ்ச்சி எனக்கு உண்டாகாதபடி மற்றொரு விஷயம் என் காதிற் பட்டது.

சில விஷமிகளின் செயல்

மற்றொரு நாள் நான் பூண்டி அரங்கநாத முதலியாரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் சிந்தாமணியில் எதுவரை நிறைவேறியுள்ளதென்று வழக்கம் போல் அன்புடன் விசாரித்தார். நான் விவரத்தைச் சொன்னேன். பிறகு அவர், “இராமநாதபுரம் அரசராகிய பாஸ்கர ஸேதுபதி அவர்களை நான் சந்தித்தேன். அவர் தமிழில் மிக்க அன்புடையவர். தங்கள் சிந்தாமணிப் பதிப்பைப் பற்றிய பேச்சு வந்தது. தமக்கும் அது முன்னமே தெரியுமென்று சொன்னதோடு, மிகவும் நல்ல நூலாகிய சிந்தாமணியைப் பதிப்பிக்கத் தங்களுக்குத் தகுதியில்லையென்று தம்மிடம் யாரோ கூறியதாகவும் சொன்னார், நல்ல காரியத்துக்கு இடையூறு விளைவிக்க எத்தனையோ விஷமிகள் காத்திருக்கிறார்கள்” என்று சிறிது வருத்தத்தோடு சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு