பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

608

என் சரித்திரம்

கொள்ளலாமென்றும் சில மாதங்கள் பொறுத்துப் பணம் கொடுக்கலாமென்றும் எனக்கு எழுதியதோடு சென்னையிலிருந்த அக்கடைக்காரருக்கும் எழுதி எனக்கு வேண்டிய காகிதத்தைக் கொடுக்கும்படி செய்தார். காகிதத்தின் விலை நூற்றைம்பது ரூபாய். குறிப்பிட்ட காலத்துக்குள் என்னிடம் பணம் சேராமையால், காலேஜ் ஆசிரியர் சிலரிடம் கடன் வாங்கி அந்தத் தொகையை அனுப்பிவிட்டேன். அடிக்கடி இந்த மாதிரியான முட்டுப்பாடுகள் நேரும். அப்போது, “எப்போது இந்தச் சிந்தாமணி முடியும்! இந்தச் சிரமங்களுக்கெல்லாம் முடிவு காலம் எப்போது வரும்?” என்ற எண்ணம் எனக்கு உண்டாகும்.


அத்தியாயம்—100

சிந்தாமணி வெளியானது

சீவக சிந்தாமணியின் மூலமும் உரையும் பெரும்பாலும் அச்சாகி விட்டன. அக்காலத்தில் அச்சிடப்பெற்ற தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றில் முகவுரை முதலியன காணப்படவில்லை. அவை இருந்தால் படிப்பவர்களுக்கு மிக்க உபயோகமாக இருக்குமென்பதை உணர்ந்த நான் சிந்தாமணிக்கு அங்கமாக அவற்றை எழுதிச் சேர்த்துப் பதிப்பிக்கலாமென்று எண்ணினேன். என்ன என்ன விஷயங்களை முகவுரையில் எழுதவேண்டுமென்பதைப் பற்றி ஆலோசித்தேன். நூலைப் படிப்பதற்குமுன் அதிலுள்ள முக்கியமான விஷயங்களையும் நூலின் பெருமையையும் உரையின் தன்மை முதலியவற்றையும் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளுவது நலமென்பது எனது கருத்து. முதலில் செய்யுட்களின் முதற் குறிப்புக்களை எழுதி ஒருவகையான அகராதி செய்து வைத்துக் கொண்டேன்.

மேற்கோள்கள்

நூலைப் பதிப்பித்து வருகையில் அங்கங்கே உள்ள மேற்கோள்களில் விளங்கியவற்றிற்குரிய ஆகரங்களை அடிக்குறிப்பிற் புலப்படுத்தியிருந்தேன். பிறகு விளங்கிய மேற்கோள்களையும் விளங்காத மேற்கோள்களையும் தனித் தனியே தொகுத்து எழுதி வைத்துக் கொண்டேன். இவற்றையெல்லாம் நூலுக்குப் பின்பு அமைக்கலாமென்று நிச்சயம் செய்தேன். முகவுரைக்கு அடுத்தபடி நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு என்பவற்றை எழுத நிச்சயித்தேன்.