பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தாமணி வெளியானது

609

முகவுரைக்கு அடுத்தபடி நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு என்பவற்றை எழுத நிச்சயித்தேன்.

சரித்திரச் சுருக்கம்

சீவக சிந்தாமணி தமிழ் நாட்டில் பழக்கமில்லாத நூலாதலால் அதிலுள்ள கதையை வசன நடையில் எழுதினால் நூலைப் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். மூவாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களையுடைய சிந்தாமணிக்கு வசன மெழுதத் தொடங்கினால், அது சீக்கிரத்தில் முடியக்கூடிய காரியம் அன்று என்றெண்ணி, சீவகன் சரித்திரத்தைச் சுருக்கமாக எழுதி அமைத்து விடலாமென்ற முடிவிற்கு வந்து கதைப்போக்கு விட்டுப் போகாமல் ஒருவகையாக அதை எழுதி முடித்தேன். அதை என்னுடன் பழகும் காலேஜ் ஆசிரியர்களிடமும் ஜைன நண்பர்களிடமும் படித்துக் காட்டினேன். அவர்கள் அதைக் கேட்டு அங்கீகரித்ததோடு சில யோசனைகளையும் சொன்னார்கள். அவற்றுள் உசிதமானவற்றை ஏற்றுக் கொண்டேன்.

நூலாசிரியர் வரலாறு முதலியன

பிறகு நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாற்றை எழுத ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை. ஜைனர்கள் தமக்குள்ளே கர்ண பரம்பரையாகச் சொல்லி வந்த செய்திகளை அவர்கள் வாயிலாக அறிந்து அவற்றைக் கோவைப் படுத்தி அதனையும் ஒரு வகையாக எழுதினேன்.

நச்சினார்க்கினியர் வரலாற்றை எழுதுவதற்குத் துணையாக அவர் உரையைப் பாராட்டும் சிறப்புப் பாயிரப் பாடல்கள் இரண்டு இருந்தன அவற்றை ஆதாரமாக வைத்துச் கொண்டு அம்மகோபகாரியின் வரலாற்றை எழுதினேன். அதில் அவர் உரை எழுதிய வேறு நூல்கள் இன்னவென்று குறிப்பிட்டேன். பத்துப் பாட்டுக்கு அவர் உரை எழுதியதைத் தெரிவிக்கும்போது, பத்துப் பாட்டுக்களின் பெயர்களும் அவற்றைப் பாடினோர், பாடப் பெற்றோர் பெயர்களும் இன்ன வென்பதைச் சேர்த்து எழுதினேன். தமிழ் நாட்டினருக்கு அது புதிய செய்தியாக இருக்குமென்பதே என் கருத்து.

பிறகு சீவகன் சரித்திரத்தில் வரும் சிறப்புப் பெயர்களைத் தனியே எடுத்து அகராதியாக அமைத்து அவற்றை விளக்கி எழுதி, “அபிதான விளக்கம்” என்ற தலைப்பின்கீழ்ப் புலப்படுத்தினேன்.

என்-39