பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

610

என் சரித்திரம்

முகவுரை

முகவுரையை எழுதத் தொடங்கி, நூலின் சிறப்பையும் அந்நூலால் இன்ன செய்திகள் தெரிய வருகின்றன வென்பதையும் முதலில் எழுதலானேன்:

‘செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்கும் காப்பியம் ஐந்தனுள் முந்தியதாகிய இந்தச் சீவகசிந்தாமணி யென்பது திருத்தக்க தேவரென்னும் ஜைன முனிவரால் இயற்றப்பட்டது. இது பழைய இலக்கிய உரைகளிலும் இலக்கண உரைகளிலும் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட பிரமாண நூல்களுள் ஒன்று; முற் காலத்து முதல், இடை, கடை என்னும் முச்சங்கத்தும் எழுந்தருளியிருந்து தமிழாராய்ந்த தெய்வப் புலவர்கள் அருளிச் செய்த இலக்கியங்கள் போன்று செந்தமிழ் நடையிற் சிறந்துள்ளது; வடமொழியில் வான்மீகம் போல், எல்லா வருணனைகளும் தன்பால் அமையப் பெற்றிருத்தலின் மகா காவியமென்று கூறப்பட்டிருத்தலன்றி, பிற்காலத்து அதி மதுரமான காப்பியங்கள் இயற்றிய மகா கவிகள் பலர்க்கும் இன்ன இன்னவற்றை இன்ன இன்னவாறு வருணித்துப் பாடுகவென அவ்வான்மீகம் போல வழி காட்டியதும் இந்நூலே என்பர்.’

இவ்வாறு எழுதி விட்டுப் பலமுறை திருப்பித் திருப்பிப் படித்தேன். முதன் முதலாக இந்தத் துறையிலே புகுந்த எனக்கு, ‘நல்ல பெயர் வாங்க வேண்டுமே’ என்ற கவலை மிகுதியாக இருந்தது. அதனோடு ‘பிழையென்று தோற்றும்படி விஷயங்களை எழுதக்கூடாது’ என்ற நினைவும் இருந்தது. ஆதலின் நான் எழுதியதைப் பலமுறை பார்த்துப் பார்த்து அடித்தும் திருத்தியும் ஒழுங்கு படுத்திக் கொண்டேன். பழக்க மில்லாமையால் ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதி முடிக்கும்போது சந்தேகமும் பயமும் உண்டாயின. ‘வான்மீகத்தை இதனோடு ஒப்பிடுவது சரியோ? பிழையோ? ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஏதாவது சொன்னால் என்ன செய்வது? என்றும், ‘பிற்கால நூல்களுக்கு வழிகாட்டி என்று சொல்லுகிறோமே; ஜைன நூலாகிய இதை அப்படிச் சொல்லு வதால் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் நம்மேல் சினம் உண்டாகுமோ?’ என்றும் கலங்கினேன். ‘நம் மனத்திற்குச் சரியென்று தோற்றியதை எழுதி விடுவோம்; பிறகு தவறென்று தெரிந்தால் மாற்றிக் கொள்வோம்’ என்று துணிந்து எழுதலானேன். நூலைப் பற்றிய செய்திகளை எழுதிவிட்டு அதனை ஆராய்ந்து பதிப்பித்தது சம்பந்தமான செய்திகளையும், எனது அன்பிற் சிறந்த ஸ்ரீ சேலம் இராமசாமி முதலியார் சிந்தாமணி பதிப்பிக்கும்படி