பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

612

என் சரித்திரம்

நூல்களும் உரைகளும் பண்டைவடிவம் குன்றாதிருத்தல் வேண்டுமென்பதே எனது நோக்கமாதலின் பிரதிகளில் இல்லாதவற்றைக் கூட்டியும். உள்ளவற்றை மாற்றியும், குறைத்தும் மனம் போனவாறே அஞ்சாது பதிப்பித்தேனல்லேன். ஒரு வகையாகப் பொருள் கொண்டு பிரதிகளில் இருந்தவாறே பதிப்பித்தேன். யானாக ஒன்றுஞ் செய்திலேன்’ என்று புலப்படுத்தினேன்.

இந்த விரதத்தை நான் அன்று முதல் இன்றுவரை மறந்தவனல்லன். பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் வழங்கி வந்து இடையிலே மறக்கப் பெற்ற நூல்களில் உள்ள பொருள்களை உள்ளபடியே அறிய வேண்டுமானால் அந்நூல்கள் இயற்றப் பெற்ற காலத்து நிலையையும், இலக்கிய மரபையும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி முற்ற உணர்ந்து கொள்வது இவ்வளவு காலத்திற்குப் பின் வந்த நம்மால் இயலாதது. ஆதலின் விளங்காதவை பிறகு விளங்குமென்று காத்திருத்தலும், மாறுபாடாக ஒரு சமயம் தோற்றுவனவற்றை மாறுபாடென்று உடனே துணியாமல் அவற்றிற்குச் சமாதானம் இருக்கக் கூடுமென்று எண்ணிப் பொறுத்திருத்தலும் என் இயல்புகளாயின. இந்தத் தாமதத்தால் என்னோடு பழகினவர்களுக்கு என்பால் சிறிது வெறுப்பு ஏற்பட்டதும் உண்டு. ஆயினும் நான் என் கொள்கையைக் கைவிடவில்லை.

உதவி செய்தோர்

ஏட்டுப் பிரதிகளின் அமைப்பைப் பற்றி எழுதிய பின்னர் எனக்குப் பொருளுதவி செய்தவர்களைப் பற்றியும், பதிப்பிக்குங் காலத்தில் உடனிருந்து உழைத்தவர்களில் முக்கியமானவர்களைப் பற்றியும் எழுதினேன். அப்பால் கிடைத்த ஏட்டுப் பிரதிகளின் விவரத்தை எழுதி முகவுரையை முடித்து விட்டேன். அப்பொழுதே சீவகசிந்தாமணிப் பதிப்பு நிறைவேறியது போன்ற ஆறுதலும் ஆனந்தமும் உண்டாயின. எல்லாவற்றையும் கைக்கொண்டு சென்னையை அடைந்தேன்.

பத்துப்பாட்டுப் பிரதி

இறுதிப் பகுதிகளை யெல்லாம் முடித்து முகவுரை முதலியவற்றையும் அச்சிற் கொடுத்து ஒரு முறை புரூப் திருத்தம் செய்து கொடுத்தவுடன் ‘ஈசன் திருவருளால் காரியம் இனிது நிறைவேறியது’ என்ற மகிழ்ச்சி மீதூர்ந்தது. உடம்பில் அப்போது ஒரு சோர்வு உண்டாயிற்று. இரவு பகலின்றி உழைத்த காலங்களிலெல்லாம் வாராத சோர்வு, முடித்துவிட்டோம் என்ற