பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளவில் காத்து நின்று பாய்வதுபோல என்னை அமிழ்த்தியது. அச்சுக்கூடத்தில் ஓரிடத்தில் படுத்து நித்திரை செய்யலானேன்; சுகமாகத் தூக்கம் வந்தது.

தூங்கி விழித்தபோது முன்பே வந்து காத்திருந்த ஒருவர், “இந்தாருங்கள், பத்துப்பாட்டு” என்று சொல்லி ஓர் ஏட்டுச் சுவடியை என் கையில் அளித்தார். கொடுத்தவரை நிமிர்ந்து பார்த்தேன். வேலூரிலுள்ள வீரசைவராகிய குமாரசாமி ஐயரென்பரே அதை அளித்தவரென்று அறிந்தேன். அவர் இயற்றமிழாசிரியராகிய விசாகப் பெருமாளையருடைய மருகர். அவர் பழைய வித்துவான்களின் வீடுகளில் ஆதரவற்றுக் கிடக்கும் ஏட்டுச்சுவடிகளை இலவசமாகவாவது, சிறு பொருள் கொடுத்தாவது அவ்வீட்டுப் பெண்பாலார் முதலியவர்களிடம் வாங்கி விரும்பியவர்களுக்குக் கொடுத்து ஊதியம் பெற்றுக் காலக்ஷேபம் செய்பவர். அவரிடம் முன்னமே நான் ‘பத்துப் பாட்டு முதலிய சங்கச்செய்யுள்கிடைத்தால் கொணர்ந்து கொடுக்க வேண்டும்; தக்க பொருளுதவி செய்கிறேன்’ என்று சொல்லியிருந்தேன்.

அவர் பத்துப் பாட்டுப் பிரதியை அந்தச் சமயத்தில் கொண்டு வந்து கொடுத்தது எனக்கு நல்ல சகுனமாகத் தோன்றியது. ‘தமிழன்னையே இவர் மூலம் மேலும் தமிழ்த் தொண்டுபுரிய வேண்டுமென்று கட்டளையிடுகிறாள்’ என்று கருதினேன். உடனே அவர் விரும்பியபடி அவர் கையில் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து அனுப்பினேன்.

“தாயே, நீ சிந்தாமணியை இந்த ஏழை முகமாக மீட்டும் அணிந்துகொண்டாய். பிற ஆபரணங்களையும் அடியேன் கைப்படும்படி செய்து அவற்றைத் துலக்கும் கைங்கரியத்திலே திருவருளைத் துணையாக வைத்துப் பாதுகாக்க வேண்டும்” என்று மனப்பூர்வமாகத் தமிழ்த்தாயை வேண்டிக் கொண்டேன்.


அத்தியாயம்—101

அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி

சிந்தாமணியைச் சேர்ந்த முகவுரை, கதைச் சுருக்கம் முதலியன அச்சிட்டு நிறைவேறின. அச்சுக்கூடத்தில் புத்தகத்தைப் பைண்டு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு இல்லை. விசாரித்ததில்