பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

614

என் சரித்திரம்

முருகேசமுதலியார் என்பவர் திறமை உடையவரென்றும் நாணயமாக நடப்பவரென்றும் தெரிந்தமையால் அச்சிட்ட பாரங்களையெல்லாம் அவரிடம் அச்சுக்கூடத்தாரைக் கொண்டு ஒப்பிக்க நினைத்தேன். அச்சுக்கூடத்திற்கு அப்போது பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்துவிட்டே பாரங்களைப் பைண்டரிடம் ஒப்பிக்கச் செய்வதுதான் நலம் என்று தெரிந்தது. ஆனால், கையிற் பணமில்லாமையால் திருவல்லிக்கேணி சென்று, என் நண்பரும் நார்ட்டன் துரை குமாஸ்தாவுமான விசுவநாத சாஸ்திரிகளைக் கண்டு ரூபாய் முந்நூறு கடனாக வேண்டுமென்றும் சில வாரங்களில் வட்டியுடன் செலுத்தி விடுவேன் என்றும் விஷயத்தைச் சொல்லித் தெரிவித்தேன். அவர் அங்ஙனமே அந்தத் தொகையைக் கொடுத்து உதவினார். உடனே அச்சுக்கூடத் தலைவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன். அவர் அச்சிட்ட பாரங்களையெல்லாம் பைண்டரிடம் ஒப்பித்து விட்டார்.

பெருமாள் தரிசனம்

அன்று சனிக்கிழமையாதலால் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாளைத் தரிசனம் செய்தேன். அந்தக் கோயிலில் சில ஸ்ரீ வைஷ்ணவ வித்துவான்களைக் கண்டு சம்பாஷித்தேன். அவர்கள் சிந்தாமணி நிறைவேறியது குறித்து என்னைப் பாராட்டினார்கள். அவர்களுள் வை.மு. சடகோபராமானுஜாசாரியரும் ஒருவர். முதன்முதலாக அப்பொழுதுதான் அவரைக் கண்டேன், அக்காலத்தில் அவருக்குப் பதினாறு பிராயம் இருக்கும். நல்ல சுறுசுறுப்புடையவராகவும் புத்திசாலியாகவும் தோற்றினார். ‘பிற்காலத்தில் சிறந்த நிலைக்கு வருவார்’ என்று கருதினேன். அது முதல் அவருடைய பழக்கம் விருத்தியாகி வந்தது.

இராமசுவாமி முதலியார் பாராட்டு

பெருமாள் தரிசனம் செய்து கொண்டு ஜாகைக்குப்போய் மனக்கவலையின்றித் துயின்றேன்.

அச்சிட்ட சிந்தாமணிப்பிரதிகள் ஐந்நூறு. அவற்றிலும் ஏறக்குறைய நூறு பிரதிகள் அச்சுக்கூடத்தாருடைய கவனக்குறைவால் வீணாகிவிட்டன.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பைண்டர் மாதிரிக்காக ஒரு பிரதியைப் பைண்டு செய்து கொடுத்தார். அதைக் கையில் எடுத்துக்கொண்டு இராமசுவாமி முதலியாரிடம் சென்றேன்.