பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளையாபதி

இவ்வாறு பல அன்பர்கள் எழுத எழுதப் பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியை மேலும் செய்து வரவேண்டுமென்ற எண்ணம் வலியுறத் தொடங்கியது. சீவகசிந்தாமணியோடு சேர்த்து ஐம்பெருங் காப்பியங்களென்று வழங்குபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு நூல்களின் ஏட்டுப் பிரதிகள் என்னிடம் இருந்தன. வளையாபதி, குண்டலகேசி என்னும் இரண்டும் கிடைக்கவில்லை. பிள்ளையவர்கள் இருந்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை. அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப் பார்த்தபோது அந்தச் சுவடி மடத்துப் புஸ்தகசாலையில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயினவென்று தெரிந்து அவற்றிற்காக வருத்தமடைவது என் இயல்பு. ‘கண்ணினால் பார்த்த சுவடி கைக்கெட்டாமற் போயிற்றே!’ என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. “கண்ணிலான் பெற்றிழந்தானெனவுழந்தான் கடுந் துயரம்” என்று கம்பர் குறிக்கும் துயரத்துக்குத்தான் அதனை ஒப்பிட வேண்டும்.

‘எதைப் பதிப்பிப்பது?’

சீவகசிந்தாமணியோடு சேர்த்து எண்ணப் பெறும் நூல்களில் ஒன்றினது ஆராய்ச்சியை அடுத்த வேலையாக மேற்கொள்ளலாமென்று எண்ணினேன். உரையுள்ள நூலாக இருந்தால் ஆராயும் சிரமம் சிறிது குறையுமென்ற நினைவினால் அடியார்க்கு நல்லாருரையோடுள்ள சிலப்பதிகாரத்தை வெளியிடலாமென்ற கருத்து உண்டாயிற்று.

அந்தச் சமயத்தில் சி. வை. தாமோதரம் பிள்ளை, பொ. குமாரசாமி முதலியார் முதலிய கனவான்கள் சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்க வேண்டுமென்று அடிக்கடி எழுதினார்கள். அதனால் சிலப்பதிகாரத்தையே பதிப்பிக்கலாமென்று எண்ணி நான் சிலரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது ஜைன நண்பர்களிற் சிலர் என்னை அணுகி, “பல காலமாக அச்சேறாமல் இருந்த