பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

642

என் சரித்திரம்

அப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது.

இராமன் கதை முதலியன

திருப்பாற்கடனாதன் கவிராயர் வீட்டு ஏட்டுப் பிரதியிலும் பத்துப் பாட்டின் மூலம் தனியே இல்லாதது கண்டு, திருநெல்வேலியில் இன்னும் பார்க்கவேண்டிய இடங்கள் இருந்தால் பார்க்கலாமென்று என் நண்பர்களிடம் சொன்னேன். பழைய காலத்தில் பெரிய உத்தியோகத்திலிருந்த சம்பிரதி திருப்பாற்கடனாத பிள்ளை யென்பவர் வீட்டில் பல ஏடுகள் உள்ளனவென்று அவர்கள் சொல்ல அங்கே போய்ப் பார்த்தேன். அவையெல்லாம் பிற்காலத்து நூல்களாகவே இருந்தன. புலவர்கள் பழங் காலத்துத் தமிழ்ச் செல்வத்தை நன்றாகப் பாதுகாத்து வந்தார்கள். பிரபுக்கள் தாங்கள் படித்து இன்புறுவதற்கு ஏற்ற நூல்களை மாத்திரம் சேமித்து வைத்துக் கொண்டார்கள் போலும். அங்கே கண்ட புத்தகங்களில் கம்ப ராமாயணத்தின் தலைப்பில் இராமன் கதை யென்றும் அரிச்சந்திர புராணத்தின் தலைப்பில் அரிச்சந்திரன் கதையென்றும், நைடதத்தின் மேல் நளன் கதை யென்றும் எழுதியிருந்தன. இப்படியே வேறு நூற்பெயர்களிலும் இருக்கக்கண்டேன். அப்போது இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, நளன் கதை யென்று நூற்பெயர்களைக் குறிப்பிடுதல் என் ஞாபகத்துக்கு வரவே, தென்பாண்டி நாட்டில் அவ்வாறு வழங்கும் வழக்கம் இருந்ததென்பதை அறிந்துகொண்டேன்.

மயிலேறும் பெருமாள் பிள்ளை

அத்தேசிகர் மிகச் சிறப்பித்துப் பாராட்டியிருக்கும் அவர் ஆசிரியராகிய மயிலேறும் பெருமாள் பிள்ளை யென்னும் வித்துவானுடைய ஞாபகம் அப்போது எழுந்தது. துறவியாகிய சாமிநாத தேசிகரே,

“திருநெல்வேலி யெனுஞ்சிவ புரத்தின் தாண்டவ
மூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல், வாழ்மயி
லேறும் பெருமாள் மகிபதி”

என்று புகழ்கிறார். அந்த வித்துவான் கல்லாடத்துக்கு உரை எழுதியவர். சங்க நூல்களும் நச்சினார்க்கினியர் உரை முதலியனவும் தமிழ்நாட்டில் வழங்காத காலத்தில் கல்லாடமும் மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையும் மிகவும் மதிப்புப் பெற்றிருந்தன. அப்-