பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

என் சரித்திரம்

அவர் உடையார்பாளையம் சென்ற சமயத்தில் கர்ப்ப தீக்ஷை வளர்த்திருந்தார். கறுகறுவென்று மீசையும் தாடியும் செழிப்பாக வளர்ந்திருந்தன. அவற்றைக் கண்ட ஜமீன்தார், “வேங்கடசுப்பு, உனக்கு இருக்கும் இந்த மீசையைக் கண்டு எனக்கு அதிகப் பொறாமை உண்டாகிறது. எனக்கு இப்படி இல்லையே என்று வருந்துகின்றேன்” என்றாராம்.

ஒரு சமயம் அரியிலூர் ஜமீன்தார் உடையார்பாளையத்திற்கு வந்திருந்தார். அவர் உடையார்பாளையம் ஜமீன்தாருக்கு மாப்பிள்ளை. அவர் வந்த காலத்தில் அவருக்கும் என் தந்தையாருக்கும் பழக்கம் உண்டாயிற்று. என் தந்தையாரது சங்கீத ஞானத்தை அவர் அறிந்து தம்முடன் வந்து அரியிலூரில் இருக்கும்படி வேண்டினார்; தம்முடைய மாமனாராகிய கச்சிக் கல்யாண ரங்கரிடமும் தமது கருத்தைத் தெரிவித்தார். அவர் அதற்கு இணங்கவே என் தந்தையார் தம் குடும்பத்துடன் அரியிலூர் சென்று அந்த ஜமீன் சங்கீத வித்துவானாக இருந்து வரத் தொடங்கினார்.

அக்காலத்தில் என் தந்தையார் தம்முடைய சங்கீதத்தால் யாவரையும் மகிழ்விக்கும் ஆற்றலை நன்றாகப் பெற்றிருந்தார். அவருக்குப் பல பெரியோர்களின் கீர்த்தனங்கள் பாடமாக இருந்தன. கனம் கிருஷ்ணையர், பெரிய திருக்குன்றம் சுப்பராமையர், ஸ்ரீரங்கம் ஸ்ரீநிவாஸன் , பல்லவி கோபாலையர், பாபநாச முதலியார், ஆனை ஐயா முதலியவர்களுடைய கீர்த்தனங்களை அவர் பாடுவார். பல்லவி பாடுவதும் கீர்த்தனங்கள் பாடுவதும் ராக ஆலாபனம் செய்வதும் ஆகியவைகளில் அவர் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தாம் பாடும்போது கனமார்க்க முறையைப் புலப்படுத்துவார்; அருணாசல கவி இயற்றிய இராம நாடக கீர்த்தனங்கள் அவருக்கு முற்றும் பாடம். தனியே சங்கீத வினிகைகள் நடத்துவதையன்றி இராமாயண கீர்த்தனங்களை இசையுடன் பாடிச் சுருக்கமாகப் பொருள் கூறுதலும் அவருக்கு வழக்கமாக இருந்தது. அவர் பாடும் போதெல்லாம் என் சிறிய தகப்பனாராகிய சின்னசாமி ஐயரும் சேர்ந்து பாடுவார்; பின்பாட்டும் பாடுவதுண்டு. தமிழ், தெலுங்கு, வடமொழி என்னும் மூன்று பாஷைகளிலும் உள்ள பல உருப்படிகள் எந்தையாருக்குப் பாடமாக இருந்தன. பக்திச் சுவையுள்ள கீர்த்தனங்களையும் வேதாந்த பரமான கீர்த்தனங்களையும் மனத்தை உருக்கும் வண்ணம் பாடுவார்.

இத்தகைய ஆற்றல் இருந்தமையால் ஜனங்களுக்கு அவரிடத்தில் மிக்க மதிப்பு இருந்தது. கனம் கிருஷ்ணையருடைய மாணாக்க ரென்பதனாலும் பெருமை உண்டாயிற்று. கனம் கிருஷ்ணையருடன் சில காலம் என் தகப்பனார் திருக்குன்றத்தில் இருந்த காரணம் பற்றி