பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

654

என் சரித்திரம்

இதனை யாவரும் உணர்வர். ஆனால் பொறாமையால் தூண்டப் பெற்றவர்களுக்கு இத்தகைய விஷயங்களெல்லாம் புலப்படுவதில்லை. கும்பகோணத்தில் பள்ளிக்கூடத் தமிழாசிரியராக இருந்த மூவர் சிந்தாமணிக் கண்டனத்தில் ஊக்கங் கொண்டனர். அவர்கள் என்னாற் சில உபகாரங்களைப் பெற்றவர்களே. ஜைன நூலை நான் அச்சிட்டது பிழையென்றும், சைவ மடாதிபதி சகாயம் செய்தது தவறென்றும், சிந்தாமணியில் பிழைகள் மலிந்துள்ளன வென்றும், அதிலுள்ள பிழைகள் கடல் மணலினும் விண்மீனினும் பல என்றும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். முதலில் அயலார் பெயரால் வெளியிட்டனர்: அப்பால் தங்கள் பெயராலேயே வெளியிட்டனர். கும்பகோணத்தில், வீதிதோறும் இந்தப் பிரசுரங்களைப் பரப்பினர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மாயூரம், திருப்பாதிரிப் புலியூர், சென்னை முதலிய இடங்களுக்கும் அனுப்பி அங்கங்கே பரவும்படி செய்தனர். சென்னையில் யார் யார் எனக்கு உபகாரம் செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் கட்டுக் கட்டாகக் கண்டனப் பிரசுரங்களை அனுப்பினர். பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசுவாமி முதலியார், ஆர்.வி.ஸ்ரீநிவாச ஐயர் முதலியவர்கள் அவற்றைக் கண்டு எனக்குச் செய்தி தெரிவித்தனர்.

இந்தக் கண்டன அலைகளுக்கிடையே நான் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை நடத்தி வந்தேன். குடந்தை மித்திரனென்னும் ஒரு பத்திரிகை கும்பகோணத்தில் சில நாள் நடந்து வந்தது. அதில் ஒரு சமயம் என்னைப் புகழ்ந்தும் அடுத்த இதழில் இகழ்ந்தும் கட்டுரைகள் வரும். என் அன்பர்கள் இத்தகைய கண்டனங்களைக் கண்டு என்பாற் சிறிதும் அவமதிப்பு அடைந்ததாகத் தெரியவில்லை. கண்டனம் செய்தவர்களுக்கு யாரையேனும் கண்டிப்பதே நெடுங்காலப் பழக்கமென்பதையும், கண்டனத்தில் வழங்கிய பாஷையின் போக்கையும் அறிந்தவர்களுக்கு அக்கண்டனத்தில் உண்மை இருந்தாலும் மதிப்பளிக்க மனம் வராது.

முருகனைப் பிரார்த்தித்தல்

ஒரு நாள் பத்துப் பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தேன். என்னோடு திருமானூர்க் கிருஷ்ணையரும், குடவாயில் சண்முகம் பிள்ளையென்பவரும், வேறு சில மாணாக்கர்களும் இருந்தனர். கண்டனக் கூட்டத்தாருடைய செயல்களைப் பற்றிய பேச்சு வந்தது. நூலை ஆராய்வதில் உண்டாகும் சிரமத்தால் அலைவு பெற்ற என் உள்ளத்துக்கு இக்கண்டனக் கூட்டத்தாருடைய செயல் அதிக வருத்தத்தை உண்டாக்கிற்று. ‘இக்கண்டனத்துக்கு விடைகூற