பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டனப் புயல்

ஆரம்பித்தால் என் ஆராய்ச்சி வேலை நின்று விடுமே. நியாயமான கண்டனத்திற்குப் பதில் சொல்லலாம். அநியாயமான பொறாமைக் கூற்றுக்குப் பரிகாரம் ஏது?’ என்று எண்ணினேன். என் மனம் முருகக் கடவுளை நினைத்து உருகியது. உடனே அவ்வுள்ள உணர்ச்சி சில செய்யுட்களாக வெளிவந்தது. அவற்றிற் சில வருமாறு:

அகமே யொருசொல் அறைவன் னிகரில் .
மகமே ருவளைத் தருள்வள் ளலருள் .
குகனே முருகா குமரா திருவே.
ரகவே லவவென் றழைநீ தினமே.

[அகமே - மனமே.]

மலர்கொண் டுனையே வழிபட் டிடுவேன்
அலர்கொண் டுவிளங் கலைவா விகள்சூழ்
கலர்கண் டறியாக் கவினே ரகவெற் .
பலர்கண் டிகழும் படிவைத் ததெனே.

[அலர்-மலர். கலர் - கீழ் மக்கள். கவின் ஏரக என் பலர் கண்டு இகழும்படி வைத்தது எனே - அழகிய சுவாமி மலையை யுடையாய்! அடியேனைப் பலர் கண்டு இகழும்படி வைத்தது ஏன்?]

ததைதீஞ் சுவைநற் றமிழ்பா டியுளம்
பதையா துறையும் படிவைத் தருள்வாய்
உதையா திபனே ரொளியா யளியாய்
சிதையா துறையுந் திருவே ரகனே.

[ததை-செறிந்த, உதையாதிபன்-சூரியன், அளி-அருள்.]

நான் எழுதிய சமாதானம்

நான் விடையொன்றும் வெளியிடாமல் இருந்தது கண்டு கண்டனக்காரர்களுக்குப் பின்னும் அதிகக் கோபமே உண்டாயிற்று. “சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்” என்று ஒரு பிரசுரம் வெளி வந்தது. பிழையல்லாதனவற்றையும் பிழையாக அதில் சொல்லியிருந்தனர். அவற்றிற்குச் சமாதானம் சொல்லத்தான் வேண்டுமென்ற கருத்து எனக்கு உண்டாயிற்று. ஒரு நாள் இரவில் நாலாம் ஜாமத்தில் எழுந்து சமாதானம் எழுதிக்கொண்டிருந்தேன். மனம் மிக வருந்தியது. அப்போது கம்பளத்தான் ஒருவன் வீதியில் “ஐயா, உங்களுக்கு க்ஷேமம் உண்டாகும்; கவலைப்பட வேண்டாம்” என்று தன் வழக்கப்படியே சொல்லி விட்டுப் போனான். அவன் வழக்கமாகச் சொன்னாலும் எனக்கு அது விசேஷமாகத்தோற்றியது. ஒருவாறு சமாதானத்தை எழுதி முடித்தேன். விடிந்தது.