பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டனப் புயல்

முதலில் கண்டனத்துக்குச் சமாதானம் எழுதாமல் இருந்த நான் மிக்க யோசனை செய்தே அதனை எழுதினேன். தீர்மானத்தோடு செய்த ஒரு காரியம் வீணாவதென்றால் சிறிது மனத் தளர்ச்சி ஏற்படுவது இயல்புதானே? ‘சிறிதும் யோசியாமல் கிழித்து விட்டாரே’ என்று எண்ணினேன்.

“என்னை யோசிக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்விஷயங்களெல்லாம் தடைகளாக இருக்கும். இக்கண்டனம் இன்றைக்கு நிற்கும்; நாளைக்குப் போய்விடும். உங்களை எதிர்ப்பவர்கள் மனம் திருந்தி உங்கள்பால் அன்பு பூணும் காலமும் வரும். அவர்கள் தங்கள் செயலை நினைந்து தாமே வருந்தினாலும் வருந்துவர்; ஆதலால் இந்தக் கண்டனப் போரில் நீங்கள் இறங்க வேண்டாம். நீங்கள் உங்கள் தமிழ்த் தொண்டைச் செய்து கொண்டேயிருங்கள். தெய்வம் உங்களைப் பாதுகாக்கும்” என்று அவர் மீட்டும் வற்புறுத்திச் சொன்னார்.

இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலை அளித்தன. “நான் இனித் தூஷணைகளைக் கவனிப்பதும் இல்லை. அவற்றிற்குச் சமாதானம் எழுதப் புகுவதும் இல்லை” என்ற உறுதி மொழியை அன்று அவரிடம் சொன்னேன். இப்பொழுது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும்போது அந்தப் பேரறிஞருடைய மணிமொழிகள் எவ்வளவு சிறப்புடையனவென்று உணர்கிறேன். தமிழ்த்தாயின் திருவடித் தொண்டில் நான் செய்யும் பிழைகளை நாளடைவில் திருத்திக் கொள்ளலாம். அந்தத் தொண்டை மதியாமல் சிற்றறிவினேனாகிய என்னை மாத்திரம் இலக்காக்கி எய்யும் வசையம்புகளை நான் என்றும் பொருட்படுத்தவேயில்லை. தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்து மோதும் வெவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால் சிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. “அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோஷிப்போமே” என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு நன்மையோ, தீமையோ அறியேன்; அதனால், என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன். இதற்கு மூல காரணம் சாது சேஷையரென்பதை என்றும் மறவேன்.

என்-42