பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

662

என் சரித்திரம்

சந்ததியார் யார் இருக்கிறார்கள்?’ என்று விசாரிக்கத் தொடங்கினேன். அவர் எங்கிருந்தாரென்று சொல்வார் ஒருவரும் இல்லை. அக்காலத்தில் மயிலாப்பூரிலுள்ள திருவண்ணாமலை மடத்தில் சரவணச் சாமியார் என்ற ஒரு துறவி இருந்தார். யாழ்ப்பாணத்தாராகிய அவரை ஸ்ரீ ஆறுமுக நாலவர், ‘சபாப்பிரசங்க சிங்கமாகிய சரவணச் சாமியார்’ என்று பாராட்டியிருக்கிறார். அவர் தமிழ் வித்துவான்; வைத்தியத்தில் இணையற்ற திறமையுடையவர். பிராயத்தில் முதிர்ந்தவராகிய அவரைக் கேட்டால் ஏதேனும் விவரம் தெரியக் கூடுமென்று சிலர் கூறவே திருவண்ணாமலை மடத்துக்குச் சென்று அப்பெரியாரைப் பார்த்தேன். நான் பார்த்த காலத்தில் அவருக்கு எழுபது பிராயம் இருக்கும், ஆனாலும் கட்டுத் தளராத உடம்பும் எடுப்பான பார்வையும் உடையவராக இருந்தார். அவருடன் சில மாணாக்கர் இருந்து பணிவிடை செய்து வந்தனர். சித்த வைத்தியராகிய அவர் தம்மைத் தேடி வந்தவர்களுக்கு மருந்து கொடுத்து நோய்களை நீக்கி வந்தார்.

நான் அவரிடம் திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையைப் பற்றி விசாரித்தேன். நல்ல வேளையாக அந்த வித்துவானைத் தமக்குத் தெரியுமென்றும், அவருக்குப் பிள்ளைகள் இல்லையென்றும், அவருடைய ஏட்டுப் பிரதிகளெல்லாம் மந்தைவெளியிலுள்ள அண்ணாசாமி உபாத்தியாயர் வீட்டில் ஒருகால் கிடைக்கலாமென்றும் அந்தப் பெரியார் கூறினார். மந்தைவெளி சென்று அண்ணாசாமி உபாத்தியார் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். அண்ணாசாமி உபாத்தியாயர் காலமாகிவிட்டமையால் அவர் மாப்பிள்ளையையே நான் பார்க்க முடிந்தது. அவருடைய சமயம் அறிந்து தக்க மனிதர்களுடன் போய்க் கேட்டபொழுது தம் வீட்டிலிருந்த சுவடிகளையெல்லாம் எடுத்துப் போட்டார். அவற்றில் அபூர்த்தியாக இருந்த பத்துப்பாட்டு உரைப் பிரதி கிடைத்தது. திருமுருகாற்றுப்படை உரைப் பிரதி ஒன்றும் இருந்தது. அவற்றையும் வேறு சில சிறு நூல்களையும் எடுத்துக் கொண்டேன். பதினெண் கீழ்க்கணக்கு முழுவதும் உள்ள சிதிலமான பிரதி ஒன்று கிடைத்தது அதில்தான் கைந்நிலை என்ற நூல் இருந்தது.

பிறகு தபால் இலாகா ஸூபரிண்டெண்டாக இருந்த வி. கனகசபைப் பிள்ளையிடமிருந்து பத்துப்பாட்டு உரைப் பிரதியொன்று கிடைத்தது. இவற்றையெல்லாம் உபயோகப்படுத்திக் கொண்டேன்.

பதிப்பு ஆரம்பம்

பத்துப் பாட்டு அச்சிட ஆரம்பித்தேன். மிக விரைவாக வேலை நடைபெற்று வந்தது. திருமானூர்க் கிருஷ்ணையர் இடை விடாமல்