பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்துப்பாட்டுப் பதிப்பு

662

உடனிருந்து உதவி புரிந்தார். ஓய்ந்த நேரங்களில் எல்லாம் தேரழுந்தூர் இராஜகோபாலாசாரியரும் வந்து துணை செய்வார்.

பூண்டி அரங்கநாத முதலியார் சல்லாபம்

பூண்டி அரங்கநாத முதலியாரிடம் அடிக்கடி சென்று பேசிப் பழகினேன். இந்த முறை அவரது பழக்கம் பின்னும் அதிகமாயிற்று. அவரிடம் போனால் தமிழ்ப் பாட்டுச் சொல்லுவதும் தமிழ்ப் புலவர்களைப் பற்றிப் பேசுவதுமாகவே பொழுது போகும். நேரம் போவது தெரியாமல் உணவையும் மறந்து பேசிக்கொண்டிருப்போம்.

அக்காலத்தில் முதலியார் ‘கச்சிக் கலம்பகம்’ என்ற ஒரு பிரபந்தத்தை இயற்றிக் கொண்டிருந்தார். ஆதலின் கலம்பகங்களின் இலக்கணத்தைப் பற்றி நாங்கள் அதிகமாகப் பேசுவோம். நான் பிள்ளையவர்கள் இயற்றிய கலம்பகங்களிலிருந்தும் அவரிடம் பாடம் கேட்ட கலம்பகங்களிலிருந்தும் பல செய்யுட்களைச் சொல்வேன். பாட்டில் இன்னது சாரமான பாகமென்று விரைவில் அறிந்து சந்தோஷிக்கும் சக்தி அரங்கநாத முதலியாரிடம் மிக அதிகமாக இருந்தது. அவர் ஏகசந்தக் கிராகி. அவர் பாடல்களை முக மலர்ச்சியோடு கேட்பதும், கேட்கும்போது தம் மனம் முழுவதையும் அந்தப் பாடற் பொருளிலே செலுத்துவதும், அங்கங்கே நயம் காணும்போது மகிழ்வதும். அந்த மகிழ்ச்சியை வெளிப்படையாகப் புலப்படுத்துவதும் அவரோடு பழகும் நேரத்தை இன்பமயமாக்கின. “உங்களைப் போன்றவர்கள் இந்த ஊரில் இருந்தால் நன்றாகப் பொழுது போகும்” என்று அவர் அடிக்கடி சொல்வார்.

காலேஜ் விடுமுறை முற்றும் முடிந்தமையால் ஜனவரி மாதம் கும்பகோணம் புறப்பட வேண்டியவனாக இருந்தேன். ஆகவே அச்சுக்கூடத்தில் வேலை தடைப்படாமல் நடைபெறும்படி ஏற்பாடு செய்து திருமானூர்க் கிருஷ்ணையரைச் சென்னையிலேயே வைத்து விட்டு நான் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். இரண்டு மூன்று நாள் விடுமுறை கிடைத்தாலும் சென்னைக்குப் போய்த் தங்கிப் பத்துப் பாட்டுப் பதிப்பைக் கவனித்து விட்டு வருவேன். அக்காலத்தில் புரசைப்பாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும், பிறகு தொழுவூர் வேலாயுத முதலியாரும் காலமாயினமை தெரிந்து மிக வருந்தினேன்.

சென்னை உத்தியோகத்தை மறுத்தது

பூண்டி அரங்கநாத முதலியார் அடிக்கடி எனக்குக்கடிதம் எழுதலாயினர். வசனமாகவும் செய்யுளாகவும் கடிதங்கள் வந்து