பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

664

என் சரித்திரம்

சென்றன. ஒரு சமயம் அவர் எனக்கு, “தாங்கள் சென்னையிலுள்ள பிரஸிடென்ஸி காலேஜு க்கு வந்தால் உங்கள் பதிப்பு வேலைகள் நன்றாக நடைபெறும். நல்ல சௌகரியங்களும் கிடைக்கும். எனக்கும் திருப்தியாக இருக்கும். உங்கள் சம்மதத்தைத் தெரிவித்தால் அதற்கு வேண்டிய முயற்சிகள் செய்வேன்” என்று எழுதியிருந்தார். முதலியாருக்குச் சென்னையிலிருந்த செல்வாக்கை நான் நன்றாக அறிந்தவன். அவர் மனம் வைத்தால் மிக எளிதில் என்னைப் பிரஸிடென்ஸி காலேஜுக்கு மாற்றும்படி செய்து விடுவார். எனக்கும் சென்னைக்குச் செல்வதில் விருப்பம் இருந்து வந்தது. நான் மேற்கொண்டிருக்கும் தமிழ் நூற்பதிப்புக்குச் சென்னை வாசம் எவ்வளவோ உதவியாக இருக்கும். கும்பகோணத்தில் இருந்தபடியே சென்னையில் பதிப்பை விரைவில் நடத்த முடியவில்லை. ஆதலின், “இறைவன் திருவருள் அரங்கநாத முதலியார் மூலம் தூண்டுகிறது” என்றுதான் முதலில் எண்ணினேன். திருவாவடுதுறைப் பழக்கம் விட்டுப் போகுமே என்ற நினைவு வந்து அந்த எண்ணத்தை மாற்றியது. சுப்பிரமணிய தேசிகர் என்னைக் கும்பகோணத்துக்கு அனுப்பியபோது, “இப்படியே பட்டணத்துக்கும் போய் மகாலிங்கையர், விசாகப் பெருமாளையர் ஆகியவர்கள் இருந்த இடத்திலும் இருந்து விளங்கவேண்டும்” என்று அன்போடு வாழ்த்தியது என் உள்ளத்தில அப்போது தோற்றியது. ‘பெரியார் அன்போடு கூறியது பலிக்கலாம். அது பலிக்கும் காலமும் இதுவாக இருக்கலாம்’ என்று நினைத்தேன்.

அரங்கநாத முதலியார் எழுதிய கடிதத்தை என் தந்தையாருக்குப் படித்துக் காட்டினேன். அவர், “நல்லதுதான். ஆனால் இங்கே கிடைக்கும் காவேரி ஸ்நானம் அங்கே ஏது? நான் ரெயில் வண்டியில் ஏறுவது இல்லையே. விருத்தாப்பிய காலத்தில் காவேரி தீரத்தை விட்டுப் போக மனம் இடம் கொடுக்கவில்லையே!” என்று சொன்னார். அந்த வார்த்தைகள் பல விதமாகத் தோற்றிய என் யோசனைகளை மாற்றின. நான் ஒரு முடிவுக்கு வந்தேன். “என் தந்தையாரது முதுமைப் பிராயத்தைக் கருதி இங்கே இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது” என்று முதலியாருக்கு எழுதி விட்டேன். இது 1889 ஆம் வருஷம் மார்ச்சு மாத ஆரம்பத்தில் நிகழ்ந்தது.

ஏப்ரல் மாத விடுமுறையில் நான் சென்னை சென்றபோது என் தந்தையார் கருத்தை முதலியாருக்கு விளக்கமாகச் சொன்னேன். அவர் ஒப்புக் கொண்டார். அந்த முறை அரங்கநாத முதலியார் தாம் இயற்றிய கச்சிக்கலம்பகச் செய்யுட்களை எனக்குக் காட்டினார். நான் பார்த்து எனக்குத் தோற்றிய அபிப்பிராயங்களைச்