பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

700

என் சரித்திரம்

ஆலயம்

மாலையில் ஆலயத்துக்குச் செல்வார். அங்கே நவநீத கிருஷ்ணசுவாமியின் ஆலயம் இருக்கிறது. ஹிருதயாலய மருதப்பத் தேவருடைய ஆட்சியில் நித்திய நைமித்திகங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஜமீன்தாருக்கு நவநீத கிருஷ்ணரே குலதெய்வம். ஆலயம் சிறிதாக இருந்தாலும் பெரிய கோயில்களுக்கு நடைபெறுவன போன்ற சிறப்புக்களை அங்கே பார்க்கலாம். பல வர்க்கான்னங்களும், லாடு, லட்டு, ஜிலேபி, தேங்குழல் முதலிய பக்ஷியவகைகளும் கண்ணபிரானுக்கு நிவேதனம் செய்யப்படும். எல்லாம் புத்துருக்கு நெய்யாற் செய்வார்கள். ஒரு லாடு உரித்த தேங்காயளவு இருக்கும். தேங்குழல் பெரிய சந்தக்கல் அளவு இருக்கும். அந்தப் பிரசாதங்களை வெளியூரிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு எடுத்தனுப்பச் செய்வது ஜமீன்தார் வழக்கம்.

மாலையில் மருதப்பத் தேவர் சுவாமி தரிசனம் செய்வார் அங்கே நல்ல பாட்டுக்களைச் சில சங்கீத வித்துவான்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள்.

இவ்வளவு ஒழுங்காகவும் திறமையாகவும் அவர் நடத்தி வந்த ஆட்சியை வேறிடங்களில் நான் பார்த்ததில்லை. சிறிய ஜமீனாக இருந்தாலும் அவர் அதற்குத் தம் ஆட்சி முறையால் பெருமையை உண்டாக்கினார். அவர் ஒரு பெரிய தேசத்தின் அதிபதியாக இருந்தால் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்திருப்பாரென்று நான் எண்ணிப் பார்ப்பேன்.

உபசாரம்

மாலை நாலு மணிக்கு ஜமீன்தாரைக் கண்டேன். தமிழ்நூலின்பத்தை இருவரும் நுகர்ந்தோம். பழைய நூல்களைப் பற்றியும் பிற்காலத்து நூல்களைப் பற்றியும் நான் ஊக்கத்தோடு பேசினேன். ஜமீன்தாருடைய கூரிய தமிழறிவை உணர்ந்து மகிழ்ந்தேன். அவர் யாரைப் பற்றியும் குற்றம் கூறுவதே இல்லை. ஜமீன்தாருடைய மாமாவாகிய பெரியசாமித் தேவரென்பவருடைய தமிழ்ச்சுவடிகள் அரண்மனையில் இருந்தன அவற்றைப் பார்த்தேன். எனக்குப் பயன்படுவதாக ஒன்றும் இல்லை. சித்திரா நதி ஸ்நானமும், இனிய விருந்துணவும், அன்பில் ஊறி வெளிவரும் ஜமீன்தார் பேச்சும், தமிழின்பமும் சேர்ந்து அங்கே தங்கியிருந்த சிலநாள் வாழ்க்கையைத் தெய்வலோக வாசம் போலாக்கிவிட்டன. நான் ராஜோபசாரத்தைப் பெற்று இன்புற்றேன்; ராஜோபசாரமென்றது உபசாரவார்த்தையன்று; உண்மையிலேயே அது ராஜோபசாரந்தான். நான் அரசனல்லனென்ற ஒன்றுதான் குறை.