பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹிருதயாலய மருதப்பத் தேவர்

701

பிரியா விடை

என் வாழ்நாள் முழுவதும் அங்கே இருந்தாலும் எனக்குச் சலிப்பு வராது; ஜமீன்தாரும் உபசரிப்பதில் குறைவு செய்யமாட்டார். அது சாத்தியமா? நான் உத்தியோகம் பார்ப்பதோடு தமிழ்ச் சுவடிக்காக ஊரெல்லாம் அலைய வேண்டிய சொந்த உத்தியோகம் வேறு உள்ளதே. ஒரு நாள், பிரிய வேண்டுமே என்ற வருத்தத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு ஜமீன்தாரிடம் பத்துப் பாடல்கள் கூறி விடை கேட்டேன்.

“.....ஒருவஞ்சிக் காண்டந், தேடத், தாரளவு புய[1]வீர கேரளபூ பால விடை தருவாய் மன்னோ” என்பது மட்டும் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. அவர் பின்னும் சிலநாள் இருந்து போக வேண்டுமென்று சொன்னார். நான வற்புறுத்தவே வேறு வழியின்றி விடை அளித்தார். ஒரு சால்வையும் சில உயர்ந்த வஸ்திரங்களும் வழிச்செலவுக்குப் பணமும் வழங்கினார்.

ஒரு நாள் மாலையில் விடை பெற்றுக் கொண்டேன். அப்போது அவர், “இங்கிருந்து வண்டியையும் சமையற்காரனையும் திட்டம் செய்து பாத்திரங்களும், சாமான்களும் அனுப்புகிறேன். நீங்கள் எங்கெங்கே போக வேண்டுமோ அவ்விடங்ளுக்கெல்லாம் செல்லலாம்” என்றார். “நான் போகிற இடங்களிலெல்லாம் சமையற்காரனை வைத்துக் கொண்டு விருந்து சாப்பிடுவது முடியாத காரியம். அதற்கேற்ற வசதி இராது. பல இடங்களில் கிடைத்ததைக் கிடைத்த நேரத்தில் உண்டு விட்டு ஏடு தேடுவேன். பட்டினி கிடக்க நேர்ந்தாலும் நேரும். எனக்கே இப்படி இருக்கும்போது வண்டி மாடு, வண்டியாள், சமையற்காரன் இவ்வளவு பரிவாரங்களையும் வைத்துக்கொண்டால் என் காரியம் நிறைவேறாது, திருக்குற்றலாம் வரையில் செல்ல வண்டி அனுப்ப ஏற்பாடு செய்தாற் போதும்” என்று கேட்டுக் கொண்டேன். அப்படியே ஏற்பாடு செய்தார். மறுநாள் விடியற்காலையில் புறப்படவேண்டும்.

விடை பெற்ற பிறகு ஜாகைக்குச் சென்றேன். அன்றிரவு பத்து மணிக்கு வழக்கம்போல் எனக்கு ஒருவர் நன்றாகக் காய்ச்சிய பால் கொணர்ந்து தந்தார். தேன்பாகும், குங்குமப்பூவும் சேர்த்துக் குழம்பு போலக் காய்ச்சிய அதைப் பருகும்போது, “இவ்வளவு உபசாரத்தை நாம் எங்கே அடையப் போகிறோம்! இவ்வளவு அன்புடையவர்களை எப்படிப் பிரிவது!” என்ற நினைவு எழவே என் கண்களிலிருந்து பல பலவென்று நீர்த்துளிகள் உதிர்ந்தன.


  1. வீர கேரளம் புதூரென்பது ஜமீன்தார் இருந்த ஊரின் பெயர்.