பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகார வெளியீடு

711

சிலப்பதிகாரம் மூலமும் உரையும் முற்றுப்பெறும் நிலையில் இருந்தன. நண்பர்கள் பலர் அரும்பதவுரையையும் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தினமையால் அதனைச் செப்பஞ் செய்து சிலப்பதிகாரத்தின் பின் அச்சிடும்படி கொடுத்து விட்டேன்.

அரும்பதவுரையின் முகவுரை

சிலப்பதிகாரத்திற்குரிய முகவுரையை முதலில் எழுதி விட்டேன். அதில் அரும்பதவுரையைப் பற்றி அதிகமாக எழுதாமல் ஓரிடத்தில் அடிக் குறிப்பில், இவ்வரும்பதவுரை, தனியே அச்சிட்டு இப்புத்தகத்தினிறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கிறது’ என்று மாத்திரம் எழுதினேன்.

அரும்பதவுரை முழுவதும் அச்சான பிறகு அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டியவற்றைத் தனியே எழுத வேண்டுமென்று தோற்றியது. அதை எழுதி விட்டால் சிலப்பதிகாரப் புத்தகம் நிறைவேறிவிடும்.

இந்த நிலையில், அச்சுக்கூடத்திற்குக் கொடுக்க வேண்டிய பணம் என் கையில் இல்லாமையால், திருவல்லிக்கேணியிலிருந்த நார்ட்டன் துரை குமாஸ்தாவாகிய விசுவநாத சாஸ்திரியாரிடம் போய் வேண்டிய தொகையைப் பெற்றுக் கொண்டேன்.

அன்று வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை சிலப்பதிகார வேலையைப் பூர்த்தி செய்து ஒரு புத்தகத்தைப் பைண்டு செய்வித்துக் கண்ணால் பார்த்துவிட்டுக் கும்பகோணம் செல்ல வேண்டுமென்ற விருப்பம் பலமாக இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை விசுவநாத சாஸ்திரியாரை அணுகியபோது அவர் அன்றிரவு தம் வீட்டிலேயே உணவு கொள்ளச் செய்தார். இரவில் அங்கே தங்கினேன்.

அரும்பதவுரைக்கு முகவுரை எழுத எண்ணிக் காகிதமும் பேனாவும் சாஸ்திரியாரிடம் வாங்கிக்கொண்டு எழுத உட்கார்ந்தேன். எனக்கிருந்த சோர்வினாலும் பசியோடு ஆகாரம் செய்தமையாலும் உடனே தூக்கம் வந்து விட்டது. ஒன்றும் செய்ய இயலாமல் படுத்துக் கொண்டேன். படுத்துக் கொள்ளும் போது, ‘இப்பொழுதும் முகவுரை எழுதவில்லையே! நாளை எட்டு மணிக்கு அச்சுக் கூடத்திற் கொடுத்தால் தானே நாளைக்கே புத்தகத்தை முடித்துக் கண்ணாற் பார்க்கலாம்?’ என்ற கவலை மாத்திரம் இருந்தது.