பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

714

என் சரித்திரம்

தொகுத்த நூல்களுள் ‘கொங்குவேள் மாக்கதை’ என்பது ஒன்று. அது யாரோ கொங்குவேள் என்ற ஒருவரைப் பற்றிய கதையாக இருக்கலாமென்றுதான் எண்ணியிருந்தேன். முன்னும் பின்னும் இல்லாத அந்த நூற்சுவடி என் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது.

அடியார்க்கு நல்லாருரையை ஆராய்ச்சி செய்தபோது ஓரிடத்தில், “கூத்தியரிருக்கையுஞ் சுற்றியதாகக், காப்பிய வாசனை கலந்தவை சொல்லி” என்ற அடிகளை அவர் எடுத்துக் காட்டியிருப்பதைக் கண்டேன்; இடைச்சங்க காலத்து நூல்களை ஆராய்ந்து செய்த உதயணன் கதையில் அவ்வடிகள் உள்ளனவென்று அவர் அறிவித்திருந்தார்.

ஒரு நாள் என்னிடமிருந்த கொங்குவேள் மாக்கதையென்னும் சுவடியைப் புரட்டிய போது அந்த இரண்டு அடிகளை அதிற் கண்டேன் ஊன்றிக் கவனித்தேன். முன்னும் பின்னும் பார்த்தேன். உதயணனென்ற பெயர் பலவிடங்களில் வந்தது கொங்குவேள் மாக்கதையே உதயணன் கதையென்று தெரிய வந்தது. பின்னும் அடியார்க்கு நல்லாருரையினால் அதற்குப் பெருங்கதை, கதையென்ற பெயர்களும் உண்டென்பதை உணர்ந்தேன். அதுகாறும் அந்நூலைக் கவனியாதிருந்த நான் அதனை ஆவலோடு படித்துப் பார்க்க ஆரம்பித்தேன்.

நான் எழுதிய நூற்குறிப்புக்களில் என்னிடமுள்ள சுவடிகளிலிருந்து தெரிந்த செய்திகளையெல்லாம் புலப்படுத்தினேன். உதயணன் கதையைப்பற்றி எழுதுகையில், “இப்பொழுது கிடைத்த கையெழுத்துப் பிரதியில் முதலும் கடையும் பழுதுபட்டுப் போய் விட்டமையால் முதலாவது உஞ்சைக் காண்டத்தில் 32 சிற்றுறுப்புக்கள் காணப்படவில்லை; ஐந்தாவது நரவாண காண்டதின் மேலுள்ள காண்டங்கள் இவை யென்பதும், அவற்றின் சிற்றுறுப்புக்கள் இத்தனை யென்பதும் தெரியவில்லை. இவ்வடியார்க்கு நல்லாருரைப் பரிசோதனையாலேயே இந்நூல் இக்காலத்து வெளிப்பட்டதென்று சொல்லலாம்” என்று குறித்தேன். அந்நூற் பிரதி என்னிடத்தில் இருப்பதை இதனால் ஒருவாறு குறிப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்பதும் என் நோக்கம்.

பிற நூல்கள்

இப்படியே முத்தொள்ளாயிரத்தைப் பற்றிய குறிப்பில், “முத்தொள்ளாயிர”மென்னும் நூல் இப்பொழுது கிடைக்கவில்லை; ஆயினும், ‘வாரிய பெண்ணை’ என்னும் இவ்வெண்பா, தான் எடுத்துக் காட்டும் செய்யுட்களின் தலைப்பில் அவ்வந்நூற்