பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—116

கம்பர் செய்தியும் ஸேதுபதி
ஸம்மானமும்

ல வருஷங்களுக்கு முன் ஒரு நாள் திருவாவடுதுறை மடத்தில் ஆதீனத் தலைவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் தேரழுந்தூரிலிருந்து ஸ்ரீ வைஷ்ணவர் ஒருவர் வந்தார். அவ்வூரின் விசேஷங்களைப் பற்றி நான் அவரிடம் விசாரிக்கலானேன். அவர் மூலமாகக் கம்பர் பிறந்த ஊர் அத்தேரழுந்தூரே என்று தெரிய வந்தது.

அழுந்தூர் மடம்

திருவழுந்தூரென்பதே அதன் இயற்பெயர். அதற்குத் திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகம் ஒன்றுண்டு. அதில் அழுந்தை என்று அதன் பெயர் சொல்லப் பெற்றுள்ளது. திருவாவடுதுறைக்கு வந்த ஸ்ரீ வைஷ்ணவர் அவ்வூர்ச் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் வேதபுரீசரென்று சொன்னார். “சிவாலயத்தில் தனியே மகா மடேசுவரர் என்ற மூர்த்தி இருக்கிறார். தீர்த்தத்தின் அதிஷ்டான தெய்வமென்று பெரியவர்கள் சொல்வார்கள்” என்றும் அவர் கூறினார் அப்போது,

“அழுந்தை மாமறையோர்
வழிபாடுசெய் மாமட மன்னினையே”

என்ற தேவாரப் பகுதி என் நினைவுக்கு வந்தது. திருஞான சம்பந்தராற் பாடப் பெற்ற மூர்த்தி அந்த மகாமடேசுவரராகத் தான் இருக்க வேண்டுமென்று தோற்றியது. ‘மாமறையோர் வழிபாடு செய்’ என்பதனால் அங்கே முற்காலத்தில் வேதகோஷம் நிரம்பியிருந்ததென்றும், வேதபுரி என்ற பெயர் அவ்வூருக்கு அமைந்தது பொருத்தமென்றும் கருதினேன்.

கம்பர் பிறந்த ஊர் தேவாரம் பெற்ற ஸ்தலமாக இருந்ததில் காரணமில்லாத திருப்தி ஒன்று எனக்கு ஏற்பட்டது. கம்பர் காலத்தில் பழமறையும் கன்னித் தமிழும் அவ்வூரில் சிறந்து விளங்கியிருக்கலாம்.

கம்பர் பிறந்த ஊர்

கம்பரைப் பற்றிய செய்திகள் பல தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன. அவரைப் பற்றிய தனிப்பாடல்களும் பல உண்டு.