பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பர் செய்தியும் ஸேதுபதி ஸம்மானமும்

717

அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் தாம் இயற்றிய விநோதரஸ மஞ்சரியில் தனிப் பாடல்களையும் கர்ண பரம்பரைச் செய்திகளையும் பிணைத்துப் படிப்பதற்கு இனிமையாக இருக்கும்படி கம்பர் வரலாற்றை எழுதி விட்டார். ஆனால் சரித்திர உண்மை எவ்வளவு என்பது வேறு விஷயம்.

கம்பராமாயணச் சிறப்புப் பாயிரங்களிலிருந்தும் தனிப் பாடல்களிலிருந்தும், ‘கம்பர் திருவழுந்தூரிற் பிறந்த உவச்சர், அவரைப் போற்றிப் பாதுகாத்தவர் சடையப்ப வள்ளலென்ற வேளாளர், அவ்வள்ளல் வெண்ணெய் நல்லூரென்னும் ஊரினர்’ என்பன போன்ற செய்திகள் தெரியவந்தன. மாயூரத்துக்கருகில் திருவழுந்தூரென்ற பெயருடைய ஊர் ஒன்று இருக்கிறது அது சிறந்த விஷ்ணு ஸ்தலம். கம்பர் அங்கே பிறந்திருப்பாரென்ற சந்தேகம் சிலருக்கு எழுந்தது. ஆனால் அவ்வூரின் இயல்பான பெயர் திரு இந்தளூர்.

உவச்சரென்பார் கோயிற் பூசை புரியும் வகுப்பினர்; ஒச்சரென்றும் சொல்வதுண்டு. மிதிலைப் பட்டியில் எனக்குக் கிடைத்த திருவிளையாடற் பயகர மாலையில் அந்நூலின் ஆசிரியர் வீரபத்திரக் கம்பரென்று இருந்தது. அதிலிருந்து கம்பரென்பது குடிபற்றிய பெயரென்றும் கம்பருடைய இயற் பெயர் மறைந்து விடவே, அவர் குடிப் பெயரே நிலைத்ததென்றும் தோற்றியது. பழங்காலத்தில் கம்பத்தை வைத்துப் பூசித்த காரணத்தால் அவர்களுக்குக் கம்பரென்ற குடிப் பெயர் வந்திருக்கலாம்.

கதிர் வேய் மங்கலம்

தஞ்சாவூரில் பிரபல வக்கீலாக இருந்தவரும் என்னிடம் பேரன்பு பூண்டவருமான கே. கல்யாண சுந்தரையர் தம்முடைய ஊராகிய கதிராமங்கலத்தில் ஒரு புது வீடு கட்டி 1892-ஆம் வருஷம் ஜூன் மாதம் கிருகப் பிரவேசம் செய்தார். அவசியம் அந்த விசேஷத்திற்கு வரவேண்டுமென்று அவர் எனக்கு எழுதினார். அந்த அழைப்புக் கடிதம் கிடைத்தவுடன், அவ்வூருக்கருகில் உள்ள கம்பர் பிறந்தவூரையும் பார்த்து விட்டு வர வேண்டுமென்ற ஆவலையும் உடன் கொண்டு சென்றேன்.

குத்தாலம் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கி வடக்கே சில மைல் தூரம் சென்றால் கதிராமங்கலத்தை அடையலாம். நான் ஏறிய ரெயில் வண்டியில் கதிராமங்கலவாசியான கோபால கிருஷ்ண ஜோஸ்யரென்பவரைக் கண்டேன். அவர் கம்பரைப்பற்றிய சில விஷயங்கள் சொன்னார்.