பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

718

என் சரித்திரம்

“கம்பர் பிறந்தது தேரழுந்தூர்தான். அதற்கு வடக்கே வெண்ணெய் நல்லூர் இருக்கிறது. சடையப்ப வள்ளல் இருந்த ஊர் அது. எங்கள் ஊராகிய கதிராமங்கலமும் கம்பர் சரித்திர சம்பந்த முடையதே” என்றார் அவர்.

“எப்படி?” என்று ஆவலோடு கேட்டேன்.

“கதிர் வேய் மங்கலமென்பது அந்த ஊருக்கு முதலில் ஏற்பட்ட பெயர். அதுவே மாறிக் கதிராமங்கலமென்று ஆயிற்று.”

“கதிர் வேய் மங்கல மென்ற பெயர் வரக் காரணம் என்ன?”

“கம்பர் ஒரு தாசியிடம் அன்பு வைத்துப் பழகி வந்தார். அவள் அந்த ஊரில் இருந்தாள். ஒருநாள் தன்னுடைய வீட்டுக் கூரையை வேய வைக்கோல் இல்லையென்று அவள் கம்பரிடம் தெரிவித்தாள். அவர் சடையப்ப வள்ளலிடம் இதைத் தெரிவிக்கவே, அவ்வள்ளல் நெற்கதிர்களையே அறுத்து அவற்றால் வேயச் சொன்னாராம். அதனால்தான் கதிர் வேய் மங்கலமென்ற பெயர் அந்த ஊருக்கு உண்டாயிற்று.”

இந்தக் கதை அப்போது எனக்குப் புதிதாக இருந்தது. கம்பருக்குத் தாசிகளின் தொடர்பு உண்டென்ற வரலாற்றை மட்டும் கேட்டிருந்தேன். இந்த வரலாறு சடையப்ப வள்ளலின் பெருந்தன்மையை விளக்குவதாக இருந்தது. ‘நாம் கதிரமங்கலம் போவதற்குப் பிரயோசனம் ஆரம்பத்திலேயே கிடைத்து விட்டது’ என்று மகிழ்ந்து அந்த ஜோஸ்யரைப் பாராட்டினேன்.

கதிராமங்கலத்துக்குப் போய் இந்தக் கதையைப் பலர் வாயிலாகக் கேட்டு உறுதி செய்து கொண்டேன். கிருகப் பிரவேசமான பிறகு தேரழுந்தூருக்குப் போனேன். அங்கே கம்பர் மேடு என்ற ஓரிடத்தைக் காட்டினார்கள். கம்பர் வீடு அம்மேட்டில் இருந்ததென்று சொன்னார்கள். அவ்வூர்ப் பெருமாள் கோயிலில் கம்பர், அவர் மனைவி இவர்களுடைய பிம்பங்களையும் கண்டேன். வேதபுரீசர் ஆலயத்துக்குப் போய் மகாமடேசுவரர் சந்நிதியையும் பார்த்தேன்.

பக்கத்தில் க்ஷேத்திரபாலபுரம் என்ற ஊர் இருக்கிறது. க்ஷேத்திர பாலரென்பது வயிரவரது திருநாமம். கம்பர் முதல் முதலாகப் பாடிய,

“வாய்த்த வயிரபுர மாகாளி யம்மேகேள்”