பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறநானூற்று ஆராய்ச்சி

725

சிரமந்தான் மிகவும் அதிகம். நூலில் உள்ள கருத்துக்களுக்கும் சொற்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொள்வது மட்டும் போதாது. புறநானூற்றில் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அப்புலவர்களுடைய பாடல்கள் வேறு நூல்களிலும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைப் பார்த்தால் அப்புலவர் வாக்கின் போக்கையும், அவருக்கு விருப்பமான கருத்துக்களையும், நடையையும் உணர்ந்து கொள்ளலாம். அந்த ஆராய்ச்சியிலிருந்து சில திருத்தங்கள் கிடைக்கும் ஆகவே சங்கப் புலவர்கள் பெயர்களை வரிசையாக எழுதிக்கொண்டு அவர்கள் இயற்றிய பாடல்கள் எந்த எந்த நூல்களிலுள்ளனவென்று தெரிந்து தொகுத்துப் படித்தேன்.

சங்க காலத்து நூல்களில் வழங்கிய மரபை அறிவதற்கு அவை அனைத்தையுமே ஆராயவேண்டும். சங்க நூல்களவ்வளவும் சேர்ந்து ஓர் உடம்பு போன்றவை. அவ்வுடம்பு முழுவதும் ஒரு வகையான நாடி ஓடும், ஆகையால் அவற்றை முற்றப் பயின்றால்தான் அந்த மரபு தெளிவாக விளங்கும். இதை உத்தேசித்து என்னிடமுள்ள எல்லாச் சங்க நூல்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொண்டேன்.

புறநானூற்றை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பன் மடங்கு இன்பம் உண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று. பலபேருடைய உதவியை நாடவேண்டியது இன்றியமையாததாக இருந்தது.

உதவி புரிந்தோர்

என்னுடன் இருந்து திருமானூர் அ. கிருஷ்ணையரும். ம. வீ. இராமானுஜாசாரியரும் இந்த விரிந்த ஆராய்ச்சியில் உதவி செய்து வந்தார்கள். அக்காலத்தில் என்னிடம் தமிழ் நூல்களைப் பாடங்கேட்டு வந்த ஸ்ரீ[1] சொக்கலிங்கத் தம்பிரானும் இவ் வாராய்ச்சியில் துணை செய்தார். ஏம்பல் பொன்னுசாமி பிள்ளை என்பவரும் காலேஜ் மாணாக்கர்கள் சிலரும் தங்கள் தங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்து வந்தார்கள்.

மேற்கோள் விளக்கம்

புறநானூற்றுச் செய்யுட்களையும் செய்யுட் பகுதிகளையும் இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியிருக்-


  1. பிற்காலத்தில் (1919-1930) திருப்பனந்தாட் காசி மடத்தில் தலைமை வகித்து விளங்கினார்.