பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

726

என் சரித்திரம்

கிறார்கள். அந்தப் பகுதிகளையும் மேற்கோள் காட்டவேண்டிய காரணத்தையும் ஆராய்ந்தால் பாடம் திருந்துவதோடு பாட்டின் கருத்தும் விளங்கும். பிரயோகங்களைத் தொகுப்பதற்கு எல்லா உரைகளையும் முற்றும் படித்துப் புறநாநூற்றுப் பகுதி வருகின்றதா என்று பார்க்கவேண்டும். அச்சிட்ட புஸ்தகங்களில் பிரயோக விளக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏட்டுச் சுவடிகளிலோ மேற்கோட் செய்யுளைக் கண்டு பிடிப்பதே கஷ்டம். நூல்களைப் பாடங் கேட்பவர்கள் தம் ஆசிரியர் கூறும் விஷயங்களை அங்கங்கே சுவடிகளில் இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைப்பதுண்டு. ஏடுகளில் உள்ளவற்றை உள்ளவாறே பிரதி செய்து அதற்குரிய ஊதியம் பெற்று ஜீவனம் செய்பவர்கள் அந்தக் குறிப்புக்களையும் பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதி விடுவார்கள். ஆராய்ச்சி செய்யும்போது அவற்றைத் தனியே பிரித்தறிவது சில சமயங்களில் மிகவும் சங்கடமாக இருக்கும்.

உரைகளைப் படித்து வரும்போது அங்கங்கே வரும் மேற் கோள்களில் எனக்குத் தெரிந்தவற்றிற்கு ஆகரம் அங்கங்கே குறித்து வைப்பது எனது வழக்கம். அச்சிடப்பட்ட தொல்காப்பிய உரைகளிலும், திருக்குறள் உரையிலும், வேறு உரைகளிலும், கண்ட மேற்கோள்கள் பலவற்றின் இடங்களை என் கைப்புத்தகங்களில் குறித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சியில் அந்தப் பதிப்புக்களிலுள்ள பிழையான பாடங்கள் எனக்குப் புலப்பட்டன. என் பதிப்புக்களில் அவற்றின் திருந்திய வடிவத்தை மட்டும் அமைப்பதையன்றி, “இது பிழை” என்று சுட்டிக் காட்டும் வழக்கத்தை நான் கொள்ளவில்லை.

இப்படி மேற்கோளாராய்ச்சிலே சென்ற காலம் மிக அதிகம். பிரயோகங்களைத் தொகுத்து வகைப்படுத்துவதிலே உண்டான சிரமம் எவ்வளவோ மிகுதியாக இருந்தாலும் ஒரு முறை பட்ட கஷ்டம் பல நூற்பதிப்புக்கு உபயோகமாக இருந்தது. அக்காலத்தில் நான் செய்து வைத்துக்கொண்ட பலவகை அகாராதிகளே இன்றும் எனக்கு மூல நிதியாக உதவுகின்றன. அவற்றைக் காணும்போது ‘எவ்வளவு காலம், எவ்வளவு அன்பர்களுடைய உழைப்பு இவற்றில் சென்றிருக்கின்றன?’ என்று எண்ணி வியப்புறுவேன். அவற்றின் அருமை பெருமையை அச்சிட்ட புத்தகங்களைப் படிப்பவர்கள் சிறிதும் அறியார். மிக உயர்ந்த அலங்காரமான மாளிகையைக் கண்டு அதன் அழகில் ஈடுபடுபவர்கள் அம்மாளிகை எந்த அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்பட்டதென்பதைக் கவனிப்பதில்லை. மிகவும் ஜாக்கிரதையாகப் போட்ட அந்த அஸ்திவாரம் பூமிக்குள் மறைந்து கிடக்கின்றது.