பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

728

என் சரித்திரம்

வில்லை. ஆனாலும் அதன் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலை மூலமும் உரையுமுள்ள ஏட்டுச் சுவடி அப்போது என்னிடமிருந்தது. அதனை ஆராய்ந்து திணை துறைகளின் இலக்கணங்களுக்குட் பெரும்பாலானவற்றைத் தெரிந்து கொண்டேன். ஆயினும் சில துறைகளுக்கு விளக்கம் அந் நூலினாலும் தெரிந்து கொள்ள இயலவில்லை.

சரித்திரச் செய்திகள்

பாடினோர் பாடப்பட்டோர் பெயரைக் குறிப்பிடும் வாக்கியங்களில் சரித்திரச் செய்திகள் இருந்தன. சங்க காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்கு அவை மிகவும் பயன்படுவன. அவ்விருவருடைய பெயர்களிலும் பலவகையான பாட பேதங்கள் இருந்தன. அவற்றைத் தனியே தொகுத்து வைத்துக் கொண்டு பிற நூல்களில் அப்பெயர்கள் வந்துள்ள இடங்களை ஆராயலானேன். இந்தச் சரித்திர ஆராய்ச்சி பெரிய சமுத்திரமாக இருந்தது. சமுத்திரத்திற்காவது ஒரு பக்கம் கரையுண்டு; இதற்கு எந்தப் பக்கத்திலும் கரையே இல்லை.

சரித்திர ஆராய்ச்சியில் வல்லவர்களைக் கொண்டு அவ்விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமென்றெண்ணி இராசாங்கத்துச் சிலாசாசனப் பரிசோதகராக இருந்த ராவ்பகதூர் வி. வெங்கையருக்குச் சில அரசர் பெயர்கள், சில ஊர்ப்பெயர்கள் முதலியவற்றை எழுதி அவை சம்பந்தமாகத் தெரிந்த செய்திகளைத் தெரிவிக்கும்படி வேண்டினேன். அதியமான், கரிகால்வளவன் முதலியவர்களைப் பற்றியும் வெண்ணி, மிழலை முதலிய ஊர்களைப் பற்றியும் அவர் சில குறிப்புக்களை எழுதியனுப்பினார்.

தபால் இலாகாவில் ஸூபரிண்டெண்டெண்டாக இருந்த ஸ்ரீ வி. கனகசபைப் பிள்ளை என்பவர் தமிழ் நூல்களிலும் தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் ஈடுபட்டவர். தமிழர் சரித்திரம் எழுத வேண்டுமென்ற கருத்தோடு அவர் ஆராய்ந்து பல செய்திகளைத் தொகுத்து வந்தார். அந்த முயற்சியின் விளைவாகப் பிறகு அவர் ஆங்கிலத்தில் “1800 வருஷங்களுக்கு முந்திய தமிழர்” என்ற அரிய புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

அவர் எனக்கு நண்பர். தம்மிடமுள்ள சில ஏட்டுப் பிரதிகளை உதவியிருக்கிறார். என்னுடைய தமிழ்நூற் பதிப்பைப் பற்றி அடிக்கடி விசாரித்து ஊக்கமூட்டுபவர்களில் அவரும் ஒருவர்.