பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/763

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

736

என் சரித்திரம்

நல்ல முயற்சிகள் ஓங்கி வந்தன. அவற்றோடு தொடர்புடைய யாவரும் இடி விழுந்தது போலச் செயலற்றுப் போயினர். ஆங்கிலத்தில் மிகவும் சிறந்த புலமை வாய்ந்து தமிழிலும் புலமை வாய்ந்தவர்களை அக்காலத்தில் பார்ப்பது அருமை. அவர் மரணத்தைக் குறித்துக் குறித்து தி. த. கனக சுந்தரம் பிள்ளை எனக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் ‘இனி இங்கிலீஷ் படித்தவர்களில் தமிழறியவல்லார் இல்லை என்பதுவே போதும்’ என்று எழுதியிருக்கிறார்.

அரங்கநாத முதலியார் எனக்குச் செய்த உதவிகள் பல. பணத்தினால் மட்டும் ஒருவன் சிறப்படைய மாட்டான். தக்க மனிதர்களுடைய பழக்கம் பல பெருங் காரியங்களைச் சாதித்துக் கொள்ள அனுகூலமாக இருக்கும். பணத்தால் முடியாத காரியத்தை இந்தப் பழக்கத்தால் நிறைவேற்றிக் கொள்ளலாம். அரங்கநாத முதலியாருடைய நட்பினால் இந்தப் பலம் எனக்கு ஏற்பட்டது. அவருடைய பழக்கம் எனக்கு இருந்ததனால் நான் பலருடைய மதிப்புக்குப் பாத்திரனானேன். அவர் எனக்குப் பழக்கம் பண்ணி வைத்த கனவான்களால் நான் பல நன்மைகளை அடைந்திருக்கிறேன்.

அரங்கநாத முதலியார் மரணமடைந்தபோது நான் இரங்கற் பாட்டு ஒன்றும் உடனே எழுதவில்லை. “நான் செய்யும் பாடல்களைக் கேட்டுச் சந்தோஷிக்க அவர் இருக்கிறாரா?” என்று நினைத்துச் சும்மா இருந்து விட்டேன். அன்பர்கள் சிலர் வற்புறுத்தவே சில செய்யுட்களை எழுதினேன். அவற்றுள் பின்வருவனவும் சேர்ந்தவை.

“பொன்னைப் பெறலாம் புகழ்பெறலாம் பூவலயம்
தன்னைப் பெறலாந் தகமுயன்றால் யாவையுமே
பின்னைப் பெறலாம் பிறழா மனவலிசேர்
உன்னைப் பெறுமாறும் உண்டோ உரையாயே.”

[பூவலயம் - பூ மண்டலம். பின்னை - பிறகு]

“பனியார் சிலசொற் பகர்ந்தே யுளங்குழைப்போய்
கனியார் இனிமை கலந்தே சுவைகள் பல
நனியார் தமிழின் நயந்தெரிய வல்லார்தாம்
இனியா ருனைப்போ லினியார் இனியாரே”
[பனி - குளிர்ச்சி]

“தரங்க வேலை யனைய தாய சபையி டைப்பு குந்துநின்
றுரங்க லந்த வாங்கி லேய ரொருமொழிப் பிரசங்கமங்
கரங்கநாத வள்ளல் போல வவர வர்வி யந்துதம்
சிரங்க ரந்து ளக்கு மாறுசெப்ப வல்லர் யாவரே.”