பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/764

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறநானூற்றுப் பதிப்பு

737

[தரங்கவேலை - அலைகளையுடைய கடல். உரம் - அறிவு. துளக்குமாறு - அசைக்கும்படி]

என் தந்தையாரை இழந்த துக்கமும், குடும்பப் பொறுப்பை வகிக்க வேண்டுமே என்ற கவலையும், அரங்கநாத முதலியார் காலமான வருத்தமும் சேர்ந்து என் மனவுறுதியைக் குலைத்தன. அதனால் தேகம் பலஹீனப்பட்டது. பித்த சுரம் என்னைப் பற்றிக் கொண்டது. சில வாரங்கள் அந்த நோயினால் துன்புற்றுத் தக்க மருந்துகளை உட்கொண்டு ஒருவாறு சௌக்கியமடைந்தேன்.


அத்தியாயம்—119

புறநானூற்றுப் பதிப்பு

1894-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் புறநானூறு பதிப்பித்து நிறைவேறியது. நான் பதிப்பித்த எட்டுத் தொகை நூல்களுள் இதுவே முதலாவது. ஆதலால் முகவுரையில் எட்டுத் தொகைகளையும் பற்றிய வரலாற்றை எழுதினேன். அகம், புறம் என்னும் இருவகைப் பொருளின் இயல்பையும் விளக்கினேன்.

முகவுரை

புறநானூற்றால் தெரிய வந்த பலவகைச் செய்திகளையும் தொகுத்து ஓர் அகவலாக அமைத்தேன். உரையைப் பற்றிய செய்திகளையும் சுருக்கமாகத் தெரிவித்து விட்டு எனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளின் நிலையை யாவரும் உணரும் பொருட்டுப் பின் வருமாறு புலப்படுத்தினேன்:

“உரையில்லாத மூலங்கள் எழுத்துஞ் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி, இவற்றுள், சில பாடல்களின் பின் திணை எழுதப்படாமலும் சிலவற்றின் பின் துறை எழுதப்படாமலும் சிலவற்றின் பின் இரண்டு மெழுதப்படாமலும் சிலவற்றின் பின் பாடினோர் பெயர் சிதைந்தும் சிலவற்றின் பின் இருவர் பெயருமே சிதைந்தும் சில பாடல்கள் இரண்டிடத் தெழுதப்பட்டு இரண்டெண்களை யேற்றும் வேறு வேறிடத்தில் இருத்தற்குரிய இரண்டு பாடல்கள் ஒருங்கெழுதப்பட்டு ஓரெண்ணை யேற்றும் சில முதற்பாகங் குறைந்தும் சில இடைப்பாகங் குறைந்தும் சில கடைப்பாகங் குறைந்தும் சில முற்றுமின்றியும் ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறு பாடல்-

என்—47