பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/765

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

738

என் சரித்திரம்

களின் அடிகளோடு கலந்தும் ஓரடியே ஒரு பாட்டுட் சிலவிடத்து வரப் பெற்றும் பொருளண்மை காணாத வண்ணம் இன்னும் பலவகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. இவற்றைப் பரிசோதித்து வருகையில், இந்நூலிலிருந்து வேறு நூல்களினுடைய பழைய உரைகளின் இடையிடையே உரையாசிரியர்களால் பூர்த்தியாகவும் சிறிது சிறிதாகவும் எடுத்துக் காட்டப்பட் டிருந்த உதாரணங்கள், சிற்சில பாடல்களிலுள்ள வழுக்களை நீக்கிச் செவ்வை செய்து கொண்டு பொருளுண்மை காணுதற்கும், சிற்சில பாடல்களிற் குறைந்த பாகங்களை நிரப்பிக் கொள்வதற்கும் பிறழ்ந்து கிடக்கும் சில பாடல்களை ஒழுங்குபடுத்தி வரையறை செய்து கொள்ளுதற்கும் பெருந்துணையாக இருந்தன.”

புறநானூற்றிலுள்ள செய்திகளைக் கொண்டு தமிழ் நாட்டுச் சரித்திரத்தை அறிந்து கொள்ளலாமென்பதையும், பல வகை ஆராய்ச்சிகளுக்கு அவை உபகாரமாகுமென்பதையும் உணர்ந்த போது, அத்துறையில் புகுந்து ஆராயலாமென்று தொடங்கினேன். எட்டுத் தொகை நூல்களுள் பதிப்பிக்கப் பெறாத நூல்களும் பிற பழைய நூல்களும் என்பால் இருத்தன. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடும் பணியை மேற்கொண்ட நான் இடையே வேறு துறையுட் புகுவதற்கு இயலவில்லை. ‘ஆதார நூல்களை ஒரு வகையாக வெளிப்படுத்தி விட்டால் ஆராய்ச்சியாளர் அவற்றை ஆராய்ந்து சரித்திரங்களையும் பிற குறிப்புக்களையும் வெளியிடலாம்’ என்றெண்ணினேன். இக் கருத்தை முகவுரையில், “இத் தமிழ் நாட்டின் பழைய சரித்திரங்களைத் தெரிந்து கொள்ளுதலிலும் தெரிவித்தலிலுமே பெரும்பாலும் காலங்கழித்து உழைத்து வரும் உபகாரிகளாகிய விவேகிகள், இந் நூலை நன்கு ஆராய்ச்சி செய்வார்களாயின் இதனால் பலர் வரலாறுகள் முதலியன தெரிந்து கொள்ளுதல் கூடும்” என்று குறிப்பித்தேன்.

அங்கங்கள்

அவ்வகை ஆராய்ச்சிகளைச் செய்பவர்களுக்குக் கருவிகளாக உதவுமென்ற ஞாபகத்தால் புறநானூற்றிற் கண்ட நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் என்பவற்றின் பெயர்களை அகராதி வரிசையில் தொகுத்து அமைத்தேன். பாடினோர் பாடப்பட்டோர் வரலாறுகளைச் சுருக்கமாகத் தெரிவித்து அவர் பெயர்களிற் காணப்படும் பேதங்களையும் தனியே பதிப்பித்தேன். விஷய சூசிகை, துறை விளக்கம், துறைக் குறிப்பு, அரும்பத அகராதி, பிரயோக விளக்கம் என்பவற்றைப் பதிப்புக்கு அங்கமாகச்