பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

746

என் சரித்திரம்

யான சிக்கல்களை உண்டாக்கியது. முதலில் அந்நூல் இன்ன சமயத்தைச் சார்ந்ததென்பதே எனக்குத் தெரியவில்லை. கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்த மளூர் ரங்காசாரியரே அது பௌத்த சமயத்தைச் சார்ந்ததென்பதை எனக்குத் தெரிவித்தார். [1]

அதுகாறும் இன்னதென்று தெரியாமல், அல்லற் பட்டுக் கொண்டிருந்த எனக்கு, அதுமுதல் வேறுவகையான அச்சம் உண்டாயிற்று. ‘நாம் சைவமடத்திற் பயின்றமையால் சைவசமய நூல்களைக் கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே வரும் வைஷ்ணவ வித்துவான்களின் பழக்கத்தால் வைஷ்ணவ மதத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. சிந்தாமணியைப் பதிப்பிக்க முயன்ற காலத்தில் ஜைன மதத்தைப் பற்றிய செய்திகள் தெரியாமல் உழன்றோம். நல்ல வேளையாக ஜைன நண்பர்கள் கிடைத்தார்கள். புதிதாக அச் சமயத்தைப்பற்றிய செய்திகளை அறிந்தோம். இப்போது புத்த சமய நூலையல்லவா எடுத்துக்கொண்டோம்! இதுவும் நமக்குத் தெரியாக மதமாயிற்றே. ஜைன சமயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஜைன நண்பர்கள் இருந்தார்கள். புத்தமதமே இந்தியாவில் இல்லையே. பௌத்தர்களை நாம் எங்கே தேடு வோம்! பௌத்த மதத்தைப் பற்றி நாம் எப்படி அறிந்து கொள்வோம்?’ என்று என் சிந்தனை சுழன்றது.

அப்போது ரங்காசாரியர் அபயமளித்தார். “நீங்கள் பயப்பட வேண்டாம்; பௌத்த மத சம்பந்தமான புத்தகங்கள் நூற்றுக் கணக்காக இங்கிலீஷில் இருக்கின்றன. வெள்ளைக்காரர்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். நான் பலவற்றைப் படித்திருக்கிறேன். பாராதவற்றை நான் படித்துப் பார்த்து உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

நான் அவரை மணிமேகலை ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாகப் பற்றிக்கொண்டேன்.

பௌத்த மத ஆராய்ச்சி

அது முதல் பௌத்த மத ஆராய்ச்சியிலே புகுந்தேன். தமிழ் நூல்களில் எங்கெங்கே பௌத்த மத விஷயங்கள் வருகின்றனவென்று தேடித் தொகுக்கலானேன். நீலகேசியின் உரையில் பௌத்த மத கண்டனம் வருமிடங்களில் புத்தரைப் பற்றிய வரலாறுகளும் பௌத்த சமயக் கொள்கைகளும் காணப்பட்டன. புத்த மித்திரர் என்ற தமிழ்ப் புலவர் இயற்றிய வீரசோழியமென்னும்


  1. இதன் விரிவை நினைவுமஞ்சரியிலுள்ள ‘மணிமேகலையும் மும்மணியும்’ என்ற கட்டுரையிற் காணலாம்.