பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிமேகலை ஆராய்ச்சி

743

இலக்கண நூலின் உரையில் புத்த தேவனைப் பற்றிய பல செய்யுட்கள் உதாரணமாக வந்துள்ளன. அவற்றையும் தனியே எடுத்து எழுதிப் படிக்கலானேன். சிவஞான சித்தியார் பரபக்கம், ஞானப் பிரகாசர் உரையில் பௌத்த மத கண்டனமுள்ள இடத்திற் பல பௌத்த சமயக் கருத்துக்கள் வருகின்றன. அவற்றையும் கவனித்து வைத்துக் கொண்டேன். இவற்றையன்றித் தமிழிலோ ஸம்ஸ்கிருதத்திலோ பௌத்த மதநூல் ஒன்றும் எனக்குக் கிடைக்கவில்லை. பாளிபாஷையிலே தான் பெரும்பான்மையான பௌத்த மத நூல்கள் உள்ளன வென்று ரங்காசாரியர் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன்பர்க், ரைஸ் டேவிஸ் முதலியோர் எழுதிய புத்தகங்களை ரங்காசாரியர் படித்துக் காட்டினார்.

சில புத்தகங்களை விலைக்கு வருவித்துக் கொடுத்தேன். புத்த பகவானது சரித்திரத்தை கேட்கக் கேட்க அவருடைய இயல்புகளில் என் உள்ளம் புதைந்து நின்றது.

அடுத்தடுத்து மணிமேகலையையும் படித்து வந்தேன். புலப்படாமல் மயக்கத்தை உண்டாக்கிய பல விஷயங்கள் சிறிது சிறிதாகத் தெளியலாயின. இனிய எளிய வார்த்தைகளில் பௌத்த சமயக் கருத்துக்கள் அதிற் காணப்பட்டன. அவற்றைப் படித்து நான் இன்புற்றேன். ரங்காசாரியர் கேட்டுக் கேட்டுப் பூரித்துப் போவார். “ஆ! ஆ! என்ன அழகாயிருக்கிறது! மொழிபெயர்ப்பு வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கின்றன!” என்று சொல்லிச் சொல்லிப் பாராட்டுவார் புத்தரைப் புகழும் இடங்களைப் பல முறை படித்துக் காட்டச்சொல்லி மகிழ்ச்சி யடைவார். “நான் இங்கிலீஷில் எவ்வளவோ வாசித்திருக்கிறேன்; ஆனால் இவ்வளவு இனிமையான பகுதிகளை எங்கும் கண்டதில்லை” என்று சொல்லுவார்.

இனிய பகுதிகள்

பௌத்த சமயத்தினர் கூறும் நான்கு சத்தியங்களாகிய துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கையும்,

“பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்;
பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்ன
தற்றோ ருறுவ தறிக”