பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

என் சரித்திரம்

எழுத்தாணிகளில் குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத்தாணி என வெவ்வேறு வகை உண்டு. வாரெழுத்தாணிக்குப் பனையோலையினாலே உறைசெய்து அதற்குள் செருகி வைப்பார்கள். மடக்கெழுத்தாணிக்குப் பிடி இருக்கும்; மடக்கிக் கொள்ளலாம், அந்தப்பிடி மரத்தினாலோ தந்தத்தினாலோ மாட்டுக் கொம்பினாலோ அமைக்கப்படும்.

ஒரு பையன் புதியதாக ஒரு நூலைப் படிக்கத் தொடங்குவதைச் சுவடி துவக்கல் என்பார்கள். பனையோலையில் அந்த நூலை எழுதி மஞ்சள் தடவி விநாயக பூஜை முதலியவற்றைச் செய்து பையனிடம் கொடுத்து உபாத்தியாயர் படிப்பிப்பார். அவன் வீட்டிலிருந்து வந்த காப்பரிசி நிவேதனம் செய்யப்படும். அது தேங்காய்த் துண்டு, எள்ளு, வெல்லம் இவைகள் சேர்க்கப் பெற்று மிகச்சுவையாக இருக்கும். அதைப் பிள்ளைகளுக்கும் பிறருக்கும் விநியோகம் செய்வார்கள். அன்றைத் தினம் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை நாளாகும்.

சுவடி துவக்கலென்றால் பிள்ளைகளுக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாகும். புதிய நூலைக் கற்பதனால் உண்டாவதன்று அது; “காப்பரிசி கிடைக்கும்; பள்ளிக்கூடம் இராது” என்ற ஞாபகமே அதற்குக் காரணம்.

பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமியாகிய தினங்களில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அந்த விடுமுறை நாட்களை ‘வாவு’ என்று சொல்வார்கள். உவா என்பதே அவ்வாறு மருவியது. உவா என்பது பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் பெயர்.

ஒவ்வொரு பிள்ளையும் தினந்தோறும் உபாத்தியாயருக்கு ஏதேனும் ஒரு பொருள் கொண்டுவந்து கொடுப்பான்; ஒரு விறகோ, வறட்டியோ, காயோ, பழமோ தருவது வழக்கம். விசேஷ தினங்களில் அந்த விசேஷத்திற்கு உபயோகப்படும் பொருள்களைத் தருவார்கள். விடுமுறை நாட்களில் பணமும் கொடுப்பதுண்டு. அதை ‘வாவுக் காசு’ என்று சொல்லுவர்.

உபாத்தியாயருக்கு மாதம் கால் ரூபாய் சம்பளம் ஒவ்வொரு பையனும் கொடுப்பான். பணக்காரர்கள் வருஷாசனமாக நெல் கொடுப்பார்கள். விசேஷ காலங்களில் மரியாதையும் செய்வார்கள். நவராத்திரி காலங்களில் உபாத்தியாயருக்கு ஒரு வகையான வரும்படி உண்டு. அந்த உத்ஸவத்தை ‘மானம்பூ’ என்று சொல்வார்கள்; மகா நோன்பு என்னும் சொல்லே அந்த உருவத்தை அடைந்தது. அக்காலத்தில் பிள்ளைகள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு வந்து