பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைக்‌ கல்வி

57

பாட்டுப் பாடுவார்கள்; கோலாட்டம் போடுவார்கள். அதற்கெனவே தனியே பாட்டுக்கள் உண்டு. ஒவ்வொருவர் வீட்டுக்கும் பிள்ளைகளை அழைத்துச் சென்று பாடச் செய்வது உபாத்தியாயர் வழக்கம். வெளியூருக்கும் அழைத்துச் செல்வது உண்டு. அவரவர்கள் தங்கள் தங்கள் நிலைமைக்குத் தக்கபடி பணம் தருவார்கள். இந்தப் பணம் முழுவதையும் உபாத்தியாயர் எடுத்துக் கொள்வார். மானம்பூ வருவாயினால்தான் உபாத்தியாயர்கள் தங்கள் வீட்டுக் கல்யாணம் முதலிய காரியங்களைச் சிறப்பாக நடத்துவார்கள்.

உபாத்தியாயருக்கு அக்காலத்தே கணக்காயரென்ற ஒரு பெயருண்டு. கிராமத்து ஜனங்கள் உபாத்தியாயரிடம் மரியாதையோடு பழகுவார்கள். பிள்ளைகளை அவர் என்ன செய்தாலும் அது குறித்து வருத்தமடைய மாட்டார்கள். அவரைக் கேட்கவும் மாட்டார்கள். வீட்டில் விஷமம் செய்யும் பிள்ளைகளை உபாத்தியாயரிடம் சொல்லி அடக்குவார்கள். இளமைப் பருவம் முழுவதும் பிள்ளைகள் உபாத்தியாயருடைய ஆட்சியின் கீழ் இருக்கவேண்டும்.

அவரையே தெய்வமாக மதிப்பதும் இன்றியமையாத வேளைகளில் அவர் வீட்டு வேலைகளைச் செய்வதும் மாணாக்கர்களுக்கு இயல்பு.

பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில நேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. அதைக் கோதண்டம் என்று கூறுவர். அப்படிப் பையன் தொங்கும்போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு. நான் ஒரு முறை இந்தத் தண்டனையை அடைந்திருக்கிறேன். பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச்செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச்செய்வது வழக்கம். அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர். அவ்விதம் நான் ஒரு முறை சவாரி செய்திருக்கிறேன்.

இவ்வாறு மாணாக்கர்கள் மனத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கல்வி புகட்டும் இந்த வழக்கம் இக்காலத்தில் யாவராலும் கண்டிக்கப்படுகிறது. அக்காலத்தில் பெரும்பாலான திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இந்த முறையில்தான் நிதழ்ந்து வந்தன. அடிக்குப் பயந்தாவது பையன் படித்து வந்தான். அவனுக்குப் பல விஷயங்கள் மனனம் ஆகும்.

காகிதம், புஸ்தகம் என்பவை வழக்கத்தில் வராத அக்காலத்தில் மாணாக்கனுக்கு ஞாபகசக்தியை அபிவிருத்தி