பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

என் சரித்திரம்

பெயர். அவர் இங்கிலீஷ் படித்தவர். அவர் வந்த காலத்தில் என் உபாத்தியாயர் அவரிடம் சொல்லி எனக்கு இங்கிலீஷ் எழுத்துக்களை கற்பிக்கும்படி கூறினர். அப்படியே அவர் கற்பிக்க நான் அவற்றைக் கற்றுக்கொண்டேன். இங்கிலீஷ் எண்களையும் (1, 2 முதலியவற்றையும்) அவரிடமே தெரிந்து கொண்டேன்.

இங்கிலீஷ் எழுத்துக்களைத் தெரிந்துகொண்ட போது எனக்குள் இருந்த பெருமிதம் இவ்வளவென்று சொல்ல முடியாது. அந்த எழுத்துக்கு அவ்வளவு பிரபாவம் இருந்தது. வெறும் எழுத்துக்களைத் தெரிந்து கொண்ட மாத்திரத்தில் பெருமை பாராட்டுவதும், கையெழுத்து மாத்திரம் இங்கிலீஷில்போடத் தெரிந்து திருப்தியடைவதும் அக்காலத்தில் அதிகமாகக் காணப்பட்டன.

எனக்கு இங்கிலீஷ் எழுத்துக்களைச் சொல்லித் தந்த சிவஸ்வாமி ஐயர் பிற்காலத்தில் திருவனந்தபுரம் ஸமஸ்தானத்தில் தக்க உத்தியோகத்தைப் பெற்று வாழ்ந்தனர்.

பாட்டியார் பாட்டனார் பிரிவு

எனக்கு ஆறாம் பிராயம் நடந்தபோது என் பாட்டியார் மிக்க அசௌக்கியத்தை அடைந்தார். ரௌத்திரி வருஷம் வைகாசி மாதம் (1860) அவர் தேக வியோகமானார். அதற்குச் சரியாக ஒரு வருஷத்திற்குப்பின், அதாவது துன்மதி வருஷம் வைகாசியில் (1861) என் பாட்டனார் உலக வாழ்வை நீத்தார். பாட்டனார் பாட்டியார் இருவரும் முதுமையும் தளர்ச்சியும் உடையவர்களாகவே இருந்தனர். பெரும்பாலும் பாட்டனாரே முந்தி இறந்துவிடுவார் என்று எண்ணினோம். நல்ல வேளையாகப் பாட்டியார் முந்திக்கொண்டார். சுமங்கலியாக இறந்து போவதைப் பெரும்பேறாகக் கருதுவது நம் நாட்டு வழக்கம் அல்லவா? என் பாட்டியாரது மரணம் அவருக்கு ஒரு புகழை உண்டாக்கியது; “கொடுத்து வைத்த மகராஜி; தாலியோடும் மஞ்சள் குங்குமத்தோடும் போனாள்” என்று ஊரினர் சொல்லிக் கொண்டனர்.

பாட்டனார் இறந்தபோது அபரக் கிரியைகளெல்லாம் முறையாக என் தந்தையார் செய்தார். தாய் தந்தை இருவருடைய மரணத்தாலும் அவருக்கு அதிகச் செலவு ஏற்பட்டது. “அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தாற், சொன்ன விசாரந் தொலையா விசாரம்” என்று பட்டினத்தார் கூறியிருக்கிறார். என் தந்தையார் நிலை அப்படித்தான் இருந்தது. குடும்ப ஸம்ரக்ஷணைக்கு வேண்டிய பொருளைத் தேடும் முயற்சிக்கு இடையிடையே விசேஷச் செலவுகள் வந்துவிடுவதனால்