பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரியிலூர்‌ ஞாபகங்கள்‌

63

கவலைக்கு உள்ளானார். தம் பெற்றோர்கள் ஊரில் இருக்கவேண்டுமென்று விரும்பியது காரணமாகவே உத்தமதானபுரம் வந்தவராதலின், அவ்விருவருடைய காலமும் ஆனபிறகு, “இனி நாம் பழையபடியே அரியிலூருக்குப் போய்க் காலக்ஷேபம் செய்தால் தான் ஒருவாறு கஷ்டம் நீங்கும்” என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

அரியிலூர்ப் பிரயாணம்

உறவினர்களெல்லாம் அவரிடம் பற்றுடையவர்கள். ஊரைவிட்டு அவர் செல்லுவதில் அவர்களுக்கு மனமில்லை. “மாதம் மாதம் செய்ய வேண்டிய கிரியைகளை இங்கே இருந்து நடத்தி ஆப்திக சிராத்தத்தையும் செய்துவிட்டுப் பிறகு போகலாமே” என்று சிலர் சொன்னார்கள்.

“அவை கிரமமாக நிறைவேற வேண்டுமானால் பணம் வேண்டாமா? அங்கே போனால் பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறி எந்தையார் தம் தம்பியாரை மட்டும் உத்தமதானபுரத்தில் வைத்து விட்டு என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அரியிலூரை நோக்கிப் புறப்பட்டனர்.

குடமுருட்டி நதியைக் கடந்து வடக்கே செல்லுகையில் எதிரே எங்கள் பந்துவாகிய முதியவர் ஒருவர் வந்தார். என் தந்தையார் ஊரைவிட்டுச் செல்வதைக் காண அவர் மனம் சகிக்கவில்லை. “நீ உங்கள் வீட்டைத் தம்பி கையில் ஒப்பித்துவிட்டுப் போவது ஸ்ரீ ராமன் ராஜ்யத்தைவிட்டு அயோத்தியிலிருந்து சீதையோடும் லக்ஷ்மணனோடும் போனதைப் போல இருக்கிறது” என்று அவர் சொல்லி வருத்தமடைந்தார். என் தந்தையாருடைய இராமாயணப் பிரசங்கத்தில் அவர் ஈடுபட்டவர். அவருக்கு இராமாயணச் செய்தியே உபமானமாகத் தோன்றியது.

பெரிய திருக்குன்றத்தில் என் அத்தை இருந்தமையால் அங்கே நாங்கள் சில நாட்கள் தங்கினோம். அப்பால் துன்மதி வருஷம் ஐப்பசி மாதம் (1861) அரியிலூர் போய்ச் சேர்ந்தோம்.

அத்தியாயம்—12

அரியிலூர் ஞாபகங்கள்


அரியிலூரில் முன்பு நாங்கள் இருந்த வீடு பாதுகாப்பின்மையால் சிதைந்து போயிற்று. அதனால் பெருமாள் கோயில் சந்நிதிக்கு