பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

என் சரித்திரம்

நேர் வடக்கில் தெற்கு வடக்காக உள்ள தெருவில் கீழ் சிறகில் வைத்தியநாதையரென்பவருடைய வீட்டில் இருந்து வந்தோம்.

எங்கள் வரவைக் கேட்ட பழைய அன்பர்கள் மிக்க குதூகலம் அடைந்தனர். பலர் வந்து என் தந்தையாரைப் பார்த்து அன்போடு வார்த்தையாடிச் சென்றனர். அப்போது எனக்கு ஏழாம் பிராயம் நடந்து வந்தமையால் உலகத்துக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் நன்றாக மனத்திற் பதிந்தன. நான் அக்காலத்திற் கண்ட இடங்களும் பார்த்த மனிதர்களும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும் எனக்குப் புதிய சந்தோஷத்தையும் ஊக்கத்தையும் அளித்தன. அரியிலூர்தான் எனக்குப் பெரிய நகரம். அந்த ஊர் ஜமீன்தார்தான் கதைகளில் கேட்ட ராஜா. அங்கிருந்த அன்பர்களே பழைய வரலாறுகளில் வரும் உபகாரிகள்.

பழங் கணக்கு

அரியிலூ ரென்பது அரியிலென்றும் வழங்கும். அரிக்கு இல்லாக இருத்தலின் அப்பெயர் வந்தது. அரியதிருமால்; இல்=இருப்பிடம். இந்த ஸமஸ்தானம் அக்காலத்தில் அவரோகண நிலைமையில் இருந்தது. புதிய பெருமை இல்லாதவர்கள் பழம்பெருமை அதிகமாகப் பாராட்டிக்கொள்வது உலக இயல்வு. ‘பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பதுபோல்’ என்ற பழமொழி அதை விளக்கத்தான் எழுந்தது. ஆதலின் அக்காலத்தில் அரியிலூர் ஸமஸ்தானம் உயர்ந்த நிலையில் இராவிட்டாலும் அதன் பழைய வரலாறுகள் மிக்க பெருமையோடு யாவராலும் சொல்லப்பட்டு வந்தன. அச்சரித்திரங்கள் எனக்கு மிக்க சுவையுள்ளனவாகத் தோன்றும். நான் முதன்முதலாகத் தெரிந்துகொண்ட சரித்திரச் செய்திகளாதலால் அவற்றில் என் மனம் ஈடுபட்டது.

அரியிலூர் ஒரு ஸமஸ்தானத்தின் தலைநகரமாகையால் தமிழ்நாட்டு ஸமஸ்தானங்களைப் போலவே வீரர், புலவர், உபகாரிகள் ஆகியவர்களுடைய தொடர்புகொண்டது. ஒவ்வொரு ஸமஸ்தானத்திலும் ஜனங்கள் மனத்தைக் கவரும் இயல்புள்ள சரித்திர வரலாறுகள் உண்டு. அரியிலூர் ஸமஸ்தான சம்பந்தமாகவும் அத்தகைய வரலாறுகளுக்குக் குறைவில்லை.

அரியிலூர் உள்ள நாட்டுக்குக் குன்றவளநா டென்பது பழம்பெயர். அதைக் குன்றையென்றும் சொல்வார்கள். அரியிலூர் ஜமீன்தார்களுக்கு ‘ஒப்பில்லாதவள்’ என வழங்கும் தேவி குலதெய்வம். அத்தேவியின் அடியவர்களாதலின் அவர்களுக்கு ஒப்பிலாத மழவராயரென்பது குடிப்பெயராக அமைந்தது.