பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரியிலூர்‌ ஞாபகங்கள்‌

65

மழவராயரென்பதற்கு வீரர் தலைவர் என்பது பொருள். மழவர்கள் என்பார் தமிழ்நாட்டிற் பழங்காலத்தில் இருந்த சிறந்த வீரர்களில் ஒரு வகையினர்.

அந்தகக்கவி வீரராகவ முதலியார் இந்த ஊருக்கு வந்து பரிசு பெற்றுச் சென்றார். அக்காலத்தில் இங்கே ஜமீன்தாராக இருந்தவர் கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராய ரென்பவர்.

படியளந்த ஜமீன்தார்

கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர் ஏழைகளுக்கு இரங்கும் தன்மையினர். புலவர்களை ஆதரிக்கும் வள்ளல். தினந்தோறும் தம்மிடம் விருந்தினர்களாக வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய பொருளை வழங்குவதை முதற்கடமையாகக் கொண்டனர். அவரவர்களுக்கு வேண்டியவைகளை அளந்து தரச் செய்தனர்.

கவி வீரராகவ முதலியார் வந்த காலத்தில் ஜமீன்தார் படியளந்து கொண்டிருப்பதை அறிந்தார். பல பேர்களுக்கு வழங்க வேண்டியிருந்தமையின் நெடுநேரமாயிற்று, அதை உணர்ந்த கவிஞருக்குப் பெருவியப்பு உண்டாயிற்று. ‘ஏதேது! இன்றைக்கு லக்ஷம் பேருக்குப் படி அளந்திருப்பார்போல் இருக்கிறதே’ என்று நினைத்தார். கவிஞர் நினைப்பதற்கும் மற்றவர்கள் நினைப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அவர் நினைப்பு ஒரு கவியாக மலர்ந்தது, ‘இந்த ஒப்பில்லாத மழவராயருக்கு மகாவிஷ்ணு ஒப்பாவரோ? திருமால் அளந்தது மூன்றுபடியே (படி-உலகம்) இவர் அளப்பது ஒரு நாளைக்கு லக்ஷம் இருக்குமே’ என்ற பொருளுடையது அந்தச் செய்யுள்:-

“சேயசெங் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்
தூயசெங் கண்ணன் இணையொப்ப னோதண் துழாயணிந்த
மாயன் அளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவ
ராயன் அளக்கும் படியொரு நாளைக் கிலக்கமுண்டே.”

இத்தகைய வரலாறுகள் பல உண்டு.[1]

அரியிலூரில் ஒரு கோட்டையும் அதற்குள் ஓர் அரண்மனையும் இருந்தன. அவை இடிந்து போயின. கோட்டைக்குப் பாதுகாப்பாக இருந்த கோட்டைமுனி என்ற தெய்வத்தின் கோயில் இன்றும்


  1. நான் எழுதி வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை முதற் பாகத்தில் மற்ற வரலாறுகளைக் காணலாம்.