பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

என் சரித்திரம்

படியே நடந்து கணக்கையும் கற்றுவந்தேன்; அட்டையில் கொறுக் காந்தட்டைப் பேனாவால் எழுதும் பழக்கத்தையும் செய்து வந்தேன். இவ்வாறு எழுதிப் பழகுவது அக்காலத்து வழக்கம்.

“தீயினில் மூழ்கினார்”

இங்ஙனம் இருந்து வருகையில் ஒரு சமயம் பெரிய திருக்குன்றத்தில் என் அத்தை குமாரருக்கு உபநயனம் நடைபெற்றது. அதற்கு என் தாய், தந்தையரும் நானும் போயிருந்தோம். பந்துக்களில் பலர் வந்திருந்தனர்.

அந்த விசேஷத்தில் ஒரு சங்கீத வித்துவான் வினிகை நடத்தினார். அவர் கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய கீர்த்தனங்களையும் பாடினார். தமிழ்நாடு முழுவதும் பரவி வந்த நந்தனார் சரித்திரத்திலிருந்தும் சில உருப்படிகளைப் பாடினார். கானடா ராகத்தில் உள்ள

“தீயினில் முழுகினார். திருநாளைப் போவார்
தீயினில் முழுகினார்”

என்ற கீர்த்தனத்தை மிக அழகாகப் பாடினார். அவர் பாடும் முறை என் மனத்தில் நன்றாகப் பதிந்தது. அக்கீர்த்தனமும் எனக்குப் பாடமாகிவிட்டது. என் தகப்பனார் கற்றுத் தராமல் சில உருப்படிகளை இவ்வாறு கேள்வியினாலேயே நான் அறிந்துகொண்ட துண்டு. அவற்றை நானே பாடிவருவேன்; வேறு யாரிடமேனும் பாடிக் காட்டுவேன். என் தகப்பனார் முன்னிலையில் மட்டும் பாடுவதற்கு அஞ்சுவேன். ‘சிறு பையன் பாடுகிறான்’ என்று சொல்லி மற்றவர்கள் என்னைப் பாராட்டி ஊக்கம் அளிப்பார்கள்.

ஒரு நாள் அந்த உபநயனத்திற்கு வந்திருந்த சிலரிடம் என்னுடைய ‘சங்கீதத் திறமை’யைக் காட்டிக்கொண்டிருந்தேன். “எங்கே, தீயினில் முழுகினார் என்பதைப் பாடு” என்றார் ஒருவர். எனக்கு அந்தக் கீர்த்தனத்தைப் பாடுவதென்றால் அதிகம் உத்ஸாகம் உண்டு. ஆதலின் அதைக் கூடியவரையில் நன்றாகப் பாடினேன். அதை மறைவிலிருந்தபடியே என் தந்தையார் கேட்டுக்கொண்டிருந்தார். எனது சங்கீத விருப்பமும், அதில் தனியே எனக்கு இருந்த பழக்கமும் அவருக்கு அப்போதுதான் புலப்பட்டன. தெலுங்கோடு சங்கீதத்தையும் மறந்து விடுவேனென்று அவர் நினைத்திருந்தாரோ என்னவோ அறியேன்; அன்று அவர் ஒரு புதிய திருப்தியை அடைந்தார்.