பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும்‌ சங்கீதமும்‌

71


பின்பு அவர் நேரே வந்தார். நான் அச்சத்தால் பாட்டை நிறுத்தினேன். “பயப்படாதே; பாடு. உனக்கும் சங்கீதம் நன்றாக வரும்போல் இருக்கிறதே!” என்று அவர் கூறினார். அவருடைய திருப்தி அந்த வார்த்தைகளிலும் முகமலர்ச்சியிலும் வெளிப்பட்டது. அன்றே என் தந்தையாருக்கு வேறு யார் மூலமாகவேனும் எனக்குச் சங்கீதமும் தமிழும் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று.

தமிழ் விதை விதைத்தவர்

என் பிதாவுடைய நண்பராகிய அரியிலூர்ச் சடகோபையங்கார் சங்கீதத்திலும் தமிழிலும் வல்லவர். அவர் வீணையும் வாசிப்பார். சில சமயங்களில் என் தந்தையார் பாட அவர் வீணை வாசிப்பதுண்டு. இருவரும் சங்கீத சம்பந்தமாக அடிக்கடி மனங்கலந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அவர் வீடு பெருமாள் கோயில் சந்நிதியில் வட சிறகில் உள்ளது.

சடகோபையங்காரே எனக்கு ஏற்ற குருவென்று எந்தையார் நிச்சயித்தார். அரியிலூருக்கு வந்தவுடன் ஒரு நாள் என்னை அவரிடம் அழைத்துச் சென்று, “இவனுக்குச் சங்கீதத்திலும் தமிழிலும் பிரியம் இருக்கிறது. மற்ற விஷயங்களில் இவன் புத்தி செல்லவில்லை. நான் இவ்வளவு நாள் சொல்லிக் கொடுத்தேன். மேலே கற்பிக்க என்னால் இயலவில்லை, நீங்கள் இவனை உங்கள் மாணாக்கனாகக் கொண்டு இரண்டு வகையிலும் பயிற்சி செய்விக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனே அவர் மிக்க அன்போடு என்னை ஏற்றார்.

என் பிதா சடகோபையங்காரிடம் என்னை ஒப்பித்ததற்கு முக்கியமான காரணம் சங்கீதத்தில் எனக்கு நல்ல பழக்கம் உண்டாக வேண்டுமென்றும், அதற்கு உதவியாகத் தமிழறிவு பயன்படுமென்றும் எண்ணியதே. ஆனால் என் விஷயத்தில் அந்த முறை மாறி நின்றது. தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும் வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பினேன். சடகோபையங்காரிடம் என்று நான் மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த் தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன். எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டி குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக்காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே.