பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சடகோபையங்காரிடம்‌ கற்றது

73

அரியிலூர்ப் பெருமாள் கோயில் தசாவதார மண்டபத்தில் உள்ள நரசிங்கமூர்த்தியை அவர் உபாசித்து வந்தார். அரண்மனை உத்தியோகத்தினின்றும் நீங்கியது சிறையினின்றும் விடுபட்டது போன்ற உணர்ச்சியை அவருக்கு உண்டாகியது; ‘முன்பே இந்தக் காரியத்தைச் செய்யாமல் இருந்தோமே!’ என்று அவர் உருகினார்;

“வஞ்ச மாரும் மனத்தரைக் காவென்று
     வாழ்த்தி வாழ்த்தி மனதுபுண்ணாகவே
பஞ்ச காலத்திற் பிள்ளைவிற் பார்கள்போல்
     ப்ரபந்தம் விற்றுப் பரிசு பெறாமலே
நெஞ்சம் வாடி இளைத்துநொந் தேனையா!
     நித்த நின்மல நின்னடி தஞ்சங்காண்
செஞ்சொல் நாவலர் போற்றவெந் நாளிலும்
     செழித்து வாழரி யில்நர சிங்கமே”

என்ற பாட்டைக் கூறிக் கதறினார். பஞ்சகாலத்திற் பிள்ளை விற்பார்கள் போல் கவிதையை மனிதருக்கு வீணே அர்ப்பணம் செய்த குறை நீங்க அவர் தம் வாழ்வு முழுவதையும் நரசிங்க மூர்த்தியின் சேவையிலே போக்கி இன்புற்றார்.

ஐயாவையங்காருக்கு ஐந்து குமாரர்கள் இருந்தார்கள். எல்லோரிலும் இளையவரே சடகோபையங்கார். அந்த ஐவரும் தமிழிலும் சங்கீதத்திலும் பயிற்சியுடையவர்களே.

அத்தியாயம்—14

சடகோபையங்காரிடம் கற்றது


டகோபையங்கார் மாநிறமுடையவர். குட்டையாகவும் பருமனாகவும் இருப்பார் பலசாலி. அவர் பேசும்போது அவரது குரல் சிறிது கம்மலாக இருக்கும்; ஆனால் பாடும்போது அது மறைந்து விடும். தமிழில் சுவை தெரிந்து படித்தவர் அவர். அவரை ஆவண்ணாவென்று யாவரும் அழைப்பர்.

அவருக்குச் சங்கீதமும் தமிழும் ஒரு தரத்திலே இருந்தன. சங்கீதப் பயிற்சி யுடையவர் தாமும் இன்புற்று மற்றவர்களையும் இன்புறுத்துவ ரென்பார்கள். சடகோபையங்காரிடமிருந்த தமிழானது சங்கீதம் போலவே அவரை முதலில் இன்புறச் செய்து பின்பு மற்றவர்களையும் இன்புறுத்தும்; சில சமயங்களில் கேட்பவர்-